ஐங்குறுநூறு 27 - கதிர் கொண்டு வளைச் செல்லும் களவன்



ஐங்குறுநூறு 27, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது
 
"செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன்
தண் அக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழ சாஅய்
அல்லல் உழப்பது எவன் கொல் அன்னாய்."

படம்: நன்றி இணையம்

எளிய உரை: செந்நெல் விளைந்த அழகிய வயலில் நெற்கதிரை எடுத்துக்கொண்டு நண்டு குளிர்ந்த அகத்தை உடைய மண் பொந்திற்குள் செல்லும். அத்தகைய ஊரைச் சேர்ந்தவனை எண்ணி  ஒளிவீசும் வளையல் நெகிழுமாறு துன்பத்தால் வருந்துவது ஏன் தாயே?

விளக்கம்: பொருள் ஈட்டச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வராததால் அவனுக்குப் புற ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டது என்று வருந்தும் தலைவிக்குத் தோழி, அவன் உன் மேல் அன்பு நிறைந்தவன், அப்படியிருக்க தோள் மெலிந்து வளை நெகிழுமாறு வருந்துவது ஏன் தோழி என்று கூறுகிறாள். கதிர் கொண்டு தன் அகம் செல்லும் நண்டைப் போல தலைவனும் பொருள் ஈட்டிக் கொண்டு இல்லறம் திரும்புவான் என்று பொருள்படத் தோழி சொல்வதாக அமைந்துள்ளது.

சொற்பொருள்: செந்நெல் - செந்நிற நெல், அம் – அழகிய, செறுவில் – வயலில், கதிர் கொண்டு – நெற்கதிரை எடுத்துக்கொண்டு, களவன் – நண்டு, தண் – குளிர்ந்த, அக – வீடு, மண் அளைச் செல்லும் – மண் பொந்திற்குச் செல்லும், ஊரற்கு – ஊரைச் சேர்ந்தவனுக்கு, எல் – ஒளியுடைய, வளை நெகிழ சாஅய – வளையல் நெகிழ்ந்து அவிழ, அல்லல் – துன்பம், உழப்பது - வருந்துவது, எவன் கொல் அன்னாய் – ஏன் தாயே 

என் பாடல்:
"அழகிய வயலில் களவன் செந்நெற் கதிர் கொண்டு
குளிர்ந்த மண் வளைச் செல்லும் ஊரற்கு 
ஒளி பொருந்திய வளை நெகிழ்ந்து அவிழ
அல்லல் உழப்பது ஏன் தாயே?"

மூழ்கிய கப்பலால் சாளரம் துடைத்து



 பெரும் பெயல் பொழிந்த சனிக்கிழமை மாலை
ஆர்வமுடன் பலகணி மருங்கில் போகி 
சாரலோடு மகிழ்ந்து காகிதக் கப்பல் செய்து
நீரில் அவை மிதப்பதும் மூழ்குவதும் கண்டு
மூழ்கிய கப்பலால் சாளரம் துடைத்து நிற்க 
'இந்தாருங்கள் சாக்லேட்', அம்மா சொல்ல
'நற்சொல் கேட்டனம்' என்றே மகிழ்ந்தனர் புதல்வர்


 
"பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை" என்ற முல்லைப்பாட்டு வரியின்  (வரி எண்.6) இனிய தாக்கம் இக்கவிதைக்கு அடித்தளம் அமைத்தது.



சொற்பொருள்: பெயல்- மழை, மருங்கில் - அருகில், போகி - சென்று, கேட்டனம் - கேட்டோம்

காகித உருளைச் சுவரலங்காரம் - பூக்கள்

அணிலும் பாடுதே

Image: thanks Google

நீண்ட நேரமாய் ஸ்குவீக் ஸ்குவீக் என்றே
அணிலும் பாடுதே

என்னை அழைக்கின்றதோ
தன்னை மறந்து இசைக்கின்றதோ

தன் துணைத்  தேடுகின்றதோ
தன் குட்டிக் கொஞ்சுகின்றதோ

காக்கையிடம் நலம் விசாரிக்கின்றதோ
பருக்கை இருக்குமிடம் சொல்கின்றதோ

சுற்றிவரும் பருந்தைக் காட்டுகின்றதோ
காற்றிலாடும் தென்னங்கீற்றில் இனிமையாய்

நீண்ட நேரமாய் ஸ்குவீக் ஸ்குவீக் என்றே
அணிலும் பாடுதே

கேள்வியிலும் பதிலிலும்

'இன்பத்திலும் துன்பத்திலும் உடன் இருப்பேன்னு' சொல்லித்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்? அப்போ நான் மட்டுமா கேள்விகளுக்குப் பதில் சொல்றது? கேள்வியிலும் பதிலிலும் உடன் இருக்க வேண்டாமா? அதான் என் கணவர்கிட்ட கேட்டுட்டேன்.

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
அத்தன வயசு வரைக்கும் இருக்கனுமா? வேணாம்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நிறைய இருக்கே - பியானோ கத்துக்கணும், பிளேன் ஓட்டக் கத்துக்கணும், பிஸிக்ஸ் ல ஒரு ஆராய்ச்சி பண்ணனும், .. (போதும்னு நான் நிறுத்திட்டேன்)

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
இதோ இப்போதான், முந்தைய கேள்வியக் கேட்டு..

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
என் மனைவியப் பாத்துட்டு இருப்பேன்
(தாங்கமுடியலப்பா..தாங்கமுடியல. இது சும்மா, தமிழ்வாசி பிரகாஷ் சகோவோட முதல் பதில நான் சொல்லிட்டு கேள்வி கேக்க ஆரம்பிச்சதன் விளைவு :) எப்படியோ, சகோவிற்கு ஒரு நன்றி.)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
நீங்க ஒருத்தருக்கொருத்தர்...எங்கள தொந்திரவு பண்ணாம ஓடிப் போய்டுங்க
(அடப் பாவமே, கேட்டா 'உன்ன வெனிஸ் கூட்டிட்டுப் போறேன்னு சொல்றாரு)

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
என் பிரச்சினைதான்..எவ்ளோ கத்துக்கணும்னு நினைக்கிறேன்..அத எப்டி பண்ணுறது? (சுய நலக்காரா)
 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் மனைவிகிட்ட (ஆஹா அப்படியா)

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
காதப் பொத்திக்குவேன்

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
எந்த நண்பர், அவங்க மனைவி எப்படின்றதை பொறுத்து...
(சந்தோசமா இருக்கச் சொல்வேன் அப்டினுதான் முதல்ல சொன்னாங்க..நான் ஒரு முறை முறைச்சேன் பாருங்க, மாத்திட்டாங்க :) )

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
வேலை பார்ப்பேன் (work from home)
(நான் ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன் ,,, போயிட்டு வரேன்)

என் தமிழ்! என் அடையாளம்!

என் தாய்மொழியாம் செம்மொழி எனக்கு முக்கியமானது, அது என் அடையாளம். இது பற்றி ஒருகவிதை  என் தமிழ்! என் அடையாளம்! என்ற தலைப்பில் முன்னர் எழுதியிருந்தேன். அதை இன்று மீள் பதிவாக வெளியிடலாம் என்ற ஒரு எண்ணத்தில், இதோ


எனக்கு என்று ஒரு அடையாளம் உண்டு
என் தாய், என் தந்தை, என் தாய் மொழி,
என் ஊர், என் நாடு என்று
இவற்றில் எதை விட்டுக் கொடுத்தாலும் 
என் அடையாளம் அழிந்து விடும்
ஆனால் இன்று பெரிதும் ஒதுக்கப் படுவது
தாய் மொழியாம் தமிழ் மொழி!

நம் தாய் மொழி நம் நாவில் சீராக இல்லாவிட்டால்
நம் தமிழ்த் தாய் நம் வீட்டில் ஆட்சி செய்யாவிட்டால்
நம் தேன் தமிழை  நம் குழந்தைகள் ருசிக்காவிட்டால்
நம் ஓங்கு தமிழ் எழுத்துகள் நம் விரல்களில் ஆடாவிட்டால்
நம் செம்மையான தமிழ்க் கருவூலத்தை நாம் மறந்தால்
ஐயோ! வெட்கக்கேடு, தன்மானக் கேடு!

'நான்' என்பதை இழந்து பல செல்வம் திரட்டினாலும் என்ன பயன்?
மேடைக்கு முகமூடி அணியலாம் அதுவே வாழ்வானால்?
சிந்திப்போம், செயல்படுவோம்!
தமிழ் மேன்மை அடைய உழைக்க வேண்டாம்
ஏன் என்றால் அதன் மேன்மை மிகப் பெரிது
அதனைக் கீழே இறக்காமல் இருந்தால்
அதுவே நாம் செய்யும் பெரும் பணி!

தமிழ் என் தாய் மொழி! என் பண்பாடு, என் வாழ்க்கை!
எனக்கும் என் சந்ததிக்கும் அதுவே முதன்மை!
இதனை மறக்காமல் வாழ்வது என் கடமை!
இப்படி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் அதுவே மேன்மை!



இங்கு பகிர்வதில் மகிழ்வடைகிறேன்.

தன்னடக்கமில்லா இச்சையே ....சை!

உடை நடை
துணையுண்டு இல்லை
குழந்தை மூதாட்டி
நேரம் காலம்
எதுவும் காரணியல்ல
தன்னடக்கமில்லா
இச்சையே ....சை!
Image: thanks Google

கயவனே
மனிதனாடா நீ?
காட்டிற்குச் சென்றால்
மிருகமும் உன்னை ஏற்காதே
கொடிகளும் மலர்களும் தழைக்க
எரிந்து போயேண்டா நீ

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

தோழி மைதிலி பத்து கேள்விகள் கேட்டு பத்தும் பதிலளிக்க என்று சொல்லிவிட்டார். என் விடைத்தாள் இங்கே..


1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
இப்புவியில் இருந்தால் நடக்கும் திறனுடனும், (யாருக்கும் தொந்திரவா இருக்கக்கூடாது)
இல்லாவிட்டால் 
நூற்றாண்டு விழாவை மேகங்களில் மிதந்தபடி பார்த்தும்  ;-)
(பெரிய அப்பாடக்கரா, நூற்றாண்டு விழாவிற்கு என்று கேட்காதீர்கள்...கனவு காண்பதில் என்ன தப்பு? :) )

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
சினத்தைக் கட்டுப்படுத்த
(இதப் படிங்க புரியும் ;-)  )

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
தோழி மைதிலி என் பெயரை இணைத்ததைப் பார்த்து, ஆஹா நான் பெரிய ஆளாயிட்டேனா என்று மகிழ்ச்சியில்.. ;-)

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
சூரிய ஒளி இருக்கும் வரை வேலை, புத்தகம், குழந்தைகளுடன் விளையாட்டு. இருண்ட பின் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கதை,
குழந்தைகளுடன் விளையாட்டு, தூக்கம் 
(காத்து இல்லேனா..... இரண்டாம் பதிலில் இருக்கும் கதையைப் படிங்க..ஒன்னும் சொல்றதுக்கில்லை :) )

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் , enjoy life 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
நீர் பிரச்சினையை  

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
அதுக்குன்னு ஒரு குழு வச்சுருக்கேன், நேரத்தையும் பிரச்சினையையும் பொறுத்து யாரென்று முடிவாகும் 

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
 கண்டுகொள்ளாமல் இருக்க கற்றுக் கொண்டேன், நான் எப்படி என்று எனக்குத் தெரியும், நெருங்கியவருக்கும் தெரியும்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
அவர் சொல்வதைக் கேட்டுக்  கைபிடித்து நிற்பேன்  
("Saying nothing sometimes says the most" - Emily Dickinson, எனக்குப் பிடித்த வரிகள்)

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
புத்தகம், புத்தகம், புத்தகம்  

என் கேள்விக்கென்ன பதில்?
'என் கேள்விக்கென்ன பதில்?' என்று நான் கேட்கும் (தொடர் பதிவு தாங்க) நட்புகள் யாரென்றால்,

1. ஸ்ரீனி (http://covaiveeran.blogspot.in/)

2. தென்றல் சசிகலா (http://veesuthendral.blogspot.in/)

3. இளையநிலா இளமதி (http://ilayanila16.blogspot.in/)

4. பூந்தளிர் தியானா (http://dheekshu.blogspot.com/)

5.சகோதரர் ரூபன் (http://tamilkkavitaikalcom.blogspot.in/)

6. சகோதரர் திரு.திண்டுக்கல் தனபாலன் (http://dindiguldhanabalan.blogspot.com/)

7. சகோதரர் இரவின் புன்னகை வெற்றிவேல் (http://iravinpunnagai.blogspot.com/)

8. தோழி தமிழ்முகில் (http://tamizhmuhil.blogspot.com/)

9. சகோதரி கோவைக்கவி (http://kovaikkavi.wordpress.com/)

10.தோழி நிகழ்காலம் எழில் (http://nigalkalam.blogspot.com/)

இத்தொடற்பதிவில் என் அழைப்பின் சங்கிலியில் அழைக்கப்பட்டோரைப் பார்க்க,
தோழி மைதிலியின் பதிவு.
மதுரைத் தமிழனின் பதிவு.

'இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?' தலைப்பில் உங்கள் பதில்களை பதிவிடவும்.  நன்றி.

மாண்டரின் மொழியில் திருக்குறள்


தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தின் உந்துதலில் தைவான் கவிஞர் யூ ஹசி திருக்குறள் முழுவதையும் பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளையும் மாண்டரின் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். இப்பொழுது பாரதிதாசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துகொண்டிருக்கிறார். மொழிபெயர்ப்புகள் டைரக்டரேட் ஆப் தமிழ் டெவெலப்மென்ட் மூலம் வெளியிடப்படும்.இதன் மூலம் உலகப் பொதுமரையையும் பாரதியார் மற்றும் பாரதிதாசன் அவர்களின் பாடல்களையும் மாண்டரின் பேசும் மக்கள் படித்து மகிழ முடியும்.

மொழிபெயர்க்கப்பட்டதில் மகிழ்ச்சிதான். ஆனாலும் இதற்கு தமிழக அரசு சுமார் 77 இலட்சம் கொடுத்திருப்பதாக இச்செய்தி சொல்கிறது. அது எதற்கு என்று தெரியவில்லை.இந்த பணிக்காக தனக்குகொடுக்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாயை பல்கலைகழகத்திற்கேத் திருப்பிக்  கொடுத்துவிட்டாராம் கவிஞர் யூ ஹசி.

கிரேக்க இலக்கியத்தில் இருந்தும் நான்கு பதிப்புகள் தமிழில் வெளியிட தமிழ் பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளதாக இச்செய்தி குறிப்பு சொல்கிறது.

நாளிதழில் வந்துள்ளதை உங்களுடன் பகிர்கிறேன்.

Thanks to The Hindu, Bangalore edition (variety/northern region).

மழையே வா ஆறை நிரப்பு

நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது என் மகன்களிடம் வெளியே பாருங்கள். மனதில் தோன்றுவதை எழுதுங்கள், நான் பரிசு தருவேன் என்றேன். இருவரும் சொல்ல சொல்ல நானே எழுத வேண்டும் என்றனர். சரியென்று எழுதினேன். சிறியவன்(ஐந்து வயது) ஏதோ பெரிய கதை சொன்னான், செய்தியாம் அது. பெரியவன்(ஒன்பது வயது) சொல்ல சொல்ல நான் எழுதியது இங்கே..அவன் கற்பனை எனக்குப் பிடித்திருந்தது.

மழை பெய்யுது
கோடி துளிகள் விழுகுது
ஒரு துளி கேட்டுச்சு, "என்ன ஆகும், கீழ போனவுடன்?"
இன்னொரு துளி சொல்லுச்சு, "நம்ம கீழபோய் தண்ணீர் கொடுப்போம்,
மரம் நல்லா வளரச் செய்வோம்,
நம்ம கீழபோய் ஆறு, குளங்களை நிரப்புவோம்"
முதல் துளி கேட்டுச்சு, "மீதி தண்ணீர் என்ன ஆகும்?"
இரண்டாம் துளி சொல்லுச்சு, "கடலில் விழுந்து திருப்பியும் மழை மேகமாகுவோம்"
முதல் துளி கேட்டுச்சு, "நம்ம எங்க விழப் போறோம்?"
இரண்டாம் துளி சொல்லுச்சு, "கீழ போய் பாக்கலாம்"
சின்ன துளி என் சின்ன தலையில் விழுந்துச்சு
பெரிய துளி என் செடியில் விழுந்துச்சு"

drop na தமிழில் என்ன என்றும் million na தமிழில் என்ன என்பதையும் முதலில் கேட்டுக்கொண்டான். முதல் துளி என்பதை கேள்வி கேட்ட துளி என்றும் இரண்டாம் துளி என்பதை பதில் சொன்ன துளி என்றும் சொன்னான், நான் அதை முதல், இரண்டாம் என்று மாற்றிக்கொண்டேன்.

"மழையே வா ஆறை நிரப்பு
பார்டர்ல இருக்குற டாமை திற" என்றான். எனக்குப் புரியவில்லை. நான் கேட்டதற்கு அவன் சொன்னான், "அம்மா, கேரளா தமிழ்நாடு பார்டர்ல இருக்குற டாம்". முல்லைப் பெரியாறு அணையைச் சொல்லியிருக்கிறான், சிலிர்த்துவிட்டேன்.

நிலக்கடலை கொறிக்கலாம்

ஆர்ப்பரிக்கும் அலைகடல்
ஆரவார மெரீனா கடற்கரை
பரந்த மணலில் ஏனோ கண்ணாடித் துண்டுகள்?
நடப்பவர் காலை முத்தமிடவா? இல்லை
கடல் வாழ் ஓருயிரைக் கொல்லவா?

நிலக்கடலை கொறிக்கலாம் - ஆனால்
நீலக் கடலைக் குப்பையாக்கலாமோ?
கரைசேரும் கிளிஞ்சல் பொறுக்கலாம்
கரையிருந்து  ஓடுகள் போலாமோ?


ஆழி சேரும் ஒரு பிளாஸ்டிக் பை
ஆமை ஒன்றைக் கொல்லலாம்
பனிக்கடல் மிதக்கும் பிளாஸ்டிக் பை
பறவை ஒன்றைக் கொல்லலாம்


உணவென்றே பிளாஸ்டிக்கை உட்கொண்டு
உயிர் விடும் சில உயிர்கள்
தூக்கியெறியும் பிளாஸ்டிக் வளையங்கள்
தூக்குக் கயிறாய்க் கொல்லும் சில உயிர்கள்


ஆறறிவு இருப்பது ஐந்தறிவை அழிக்கவா?
ஆய்ந்து அறிந்து இயற்கையைப் போற்றவா?

குப்பையை ஆங்காங்கே வீசலாமோ?
மக்காத பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தலாமோ?


Images: thanks google

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...