மகள், மருமகள் - இரண்டு பார்வை

"நீ செய்வ...என் பொண்ணு செய்ய மாட்டா" என்று தன் மாமியார் சொன்னதும் அமலாவிற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. "நீ செய்வ.." அவள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. மதிய உணவிற்கு டப்பாவில் கட்டிக்கொண்டு விரைந்து சென்று பேருந்தில் ஏறினாள். பேருந்து முன்னே செல்ல அவள் மன உந்து பின்னே சென்றது.

"அம்மா, காபி" என்ற அமலாவிற்கு காபி கலந்து கொடுத்த அம்மா கூடவே இரண்டு வடையும் கொண்டு வந்தாள். "சாப்பிட்டு விட்டு படி அமலா, சிறிது நேரம் கழித்து சாப்பாடு வைக்கிறேன்", என்றபடியே போனாள். படிப்பில் மூழ்கிய அமலா அம்மா வந்து காலி குவளையை எடுத்துச் செல்லும்பொழுது சிறு புன்னகையொன்றை தந்து விட்டு படிப்பைத் தொடர்ந்தாள்.
...

அன்று விடுமுறை,  நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த அமலாவிற்கு "விடுமுறை தினத்திலாவது வீட்டைப் பெருக்கினால் என்ன?" என்று சொல்லிக்கொண்டே அம்மா வீட்டைப் பெருக்கியது தெரியவில்லை.
...

கல்லூரி முடிந்து மூன்று மணிக்கு வீடு திரும்பிய அமலா அம்மா அசதியாக படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு பூனை போல அடுமனையில் நுழைந்தாள். சத்தம் வரக்கூடாதே என்று சிரத்தை எடுத்து மெதுவாக இரண்டு கோப்பைகளைக் கழுவியிருப்பாள். அம்மா வந்துவிட்டாள்! உடம்பின் தொப்புள் கொடி தான் அறுக்கப்பட்டது போல, மனதிலும் ஒரு கொடி இணைப்பு இருக்கும் போல என்று எண்ணினாள் அமலா. பிறகு எப்படி அம்மா எழுந்து வந்தாள்? "அமலா, விடு நான் கழுவிக் கொள்கிறேன்" என்று வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டாள். பிறகு என்ன? அமலா, நாவல், அமலா!

ஒரு குழியில் ஏறி இறங்கிய பேருந்து அமலாவை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தது. இன்றைய நிகழ்ச்சியையும் கண் முன் கொண்டு வந்தது.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து சமையலை ஆரம்பித்து காலை உணவு, மதிய உணவு என்று எல்லாம் செய்து முடித்தாள். நேற்று  வீட்டு வேலை செய்யும் வேணி வந்து, "அக்கா, பண்டிகைக்கு ஊருக்குப் போகணும், நான்கு நாட்கள் விடுப்பு வேண்டும்", என்றாள். அமலாவும், "போய்  விட்டு சரியாக வந்து விடு வேணி" என்று சொல்லி அனுப்பிவிட்டாள். அதனால் அவசர அவசரமாக பாத்திரங்களைத் துலக்கிவிட்டு வீட்டையும் பெருக்கிய அமலா தன் நாத்தனார் இன்னும் உறங்கிக்கொண்டிருந்ததால் அத்தையிடம், "அத்தை, இந்த அறை மட்டும் பெருக்கவில்லை, நான் அலுவலகம் கிளம்புகிறேன், .." என்று சொல்வதற்குள் இடைமறித்த அவள் மாமியார், "அமலா, வீட்டுவேலை எல்லாம்  நீ செய்வ..என் பொண்ணு செய்ய மாட்டா, செல்லமா வளந்த பொண்ணு, அவளுக்குப் பழக்கமில்ல, அதனால் மாலை வந்து நீயே செய், அவ எதுவும் ஒத்தாசை செய்வான்னு நெனச்சுடாத!" என்று சொல்லிவிட்டு நாளிதழுடன் சென்று உறங்கிக் கொண்டிருந்த மகள் அருகில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கிவிட்டாள்.

அமலா விக்கித்து நின்றாள். எனக்கும் பழக்கமில்லையே, நானும் செல்லமாகத் தானே வளர்ந்தேன். இந்த வேலையெல்லாம் திருமணத்திற்குப் பின் இரண்டு வாரங்கள் தானே செய்தாள்..அதுவும், வேலைக்காரி அமையும் வரைக்கும், நம் வீடு நாம் செய்வோம் என்று தானே செய்தாள்? விடுமுறை முடிந்து இங்கு வருவதற்கு முன்னும் ஊரில் மாமியார் வீட்டில் யதார்த்தமாக உதவி செய்யலாம் என்று சில வேலைகள் செய்தாள். ஆனால் அதுவெல்லாம் நல்ல பெயர் எதுவும் சேர்க்கவில்லை போலவே...தான் ஏதோ வேலைக்காரி என்றும் தன் மகள் செல்லப்பெண் என்றும் மாமியார் பேசுவதைக் கேட்டால்....

வேலை செய்வது அமலாவை சிறிதும் வருத்தவில்லை, அது தன்  வீடு. ஆனால் மாமியாரின் எண்ணம்?  மகளுக்கு ஒரு பார்வையும் மருமகளுக்கு ஒரு பார்வையும் இருக்குமா? தன்னைச் செல்லமாக வளர்த்த அம்மாவிற்கு தெரிந்தால் என்ன செய்வாள்?

தன் நிறுத்தம் வந்ததை உணர்ந்து இறங்கிய அமலாவின் மனம் பட்ட பாடு யாருக்குப் புரியும்?

34 கருத்துகள்:

  1. இந்த பார்வை ஒரு தொற்று நோய் மாமியார் ஆனதும் வந்து விடும் போல எல்லோர் வீட்டிலும் உள்ளதை நல்லா சொன்னீங்க.. என்ன எனக்குத்தான் வந்து கேட்கவும் அம்மா இல்ல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாச் சொன்னீங்க..நான் அப்படி மாறினால் என்னைக் கண்டித்துவிடு என்று நெருங்கிய தோழியிடம் சொல்லிவைத்திருக்கிறேன் :)
      வருத்தப்படாதீங்க சசி, அம்மா இருந்தாலும் கேட்க முடியாது..உங்கள் அம்மாவின் நினைவை ஏற்படுத்தி வருத்தப்பட வைத்திருந்தால் என்னை மன்னிச்சுடுங்க.

      நீக்கு
    2. என்னங்க இது மன்னிப்பு எல்லாம். எங்க அம்மா இருந்தாலும் கேட்க வரமாட்டாங்க அவங்க என்னையத்தான் அனுசரித்து போக சொல்வாங்க அந்த மாதிரி சுபாவம் அவங்களுக்கு.

      நீக்கு
  2. என்னதான் இருந்தாலும் மகள் என்பவள் புகுந்த வீட்டுக்குப் போனதும் மருமகளாய் இதே வேலைகளை செய்யப்போகிறவள் தானே? அதனால் அம்மா அப்படி இருக்கலாம்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியென்றால் சொல்லும் விதம் நன்றாய் இருக்கலாமே ஸ்கூல் பையன். மேலும் மருமகளை கண்டிப்பாக எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று அதிகாரம் செய்வது மிகப்பெரிய தப்புதான். மருமகளை வேலை வாங்கும் மாமியார் சிலர் புகுந்தவீட்டில் மகளை வேலை செய்ய வேண்டாம் என்று சொல்வதும் இருக்கத்தான் செய்கிறது.
      உங்கள் கருத்திற்கு நன்றி!

      நீக்கு
  3. தன் பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண்கள். புகுந்த வீடு சென்றதும் கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டியுள்ளது. அதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இந்த பழி வாங்கும் எண்ணம் பலரிடம் முற்றிலுமாக மாறி விட்டது என்று சொல்வதற்கில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..அடுத்த தலைமுறையிலாவது மகளும் மருமகளும் சரிசமமாக நம் வீட்டுப் பெண்கள் என்ற எண்ணம் வரட்டும். உங்கள் கருத்துரைக்கு நன்றி திரு.தனபாலன்.

      நீக்கு
  5. சரியாகச் சொன்னீர்கள்
    ஒரு கண்ணில் வெண்ணையும்
    ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்துப் பார்க்கிற
    குணம் இன்னும் சில பெருசுகளிடம்
    தொடர்ந்து கொண்டுதான் உள்ளது
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மாமியார்-மருமகள் பிரச்சனை தீரவே தீராதோ? நல்லதொரு கதை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீரும், என்று தீரும் என்று தான் தெரியவில்லை..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுரேஷ்.

      நீக்கு
  7. இரண்டுமே நம் பெண்கள் எனும் எண்ணம் வர வேண்டும்...எதிர்காலத்தில் நாமாவது அப்படியிருப்போம் தோழி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி , அந்த எண்ணம் வர வேண்டும். கண்டிப்பாக நாம் அப்படி இருப்போம்.
      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  8. இது போலவும் இருக்கிறார்கள் சிலர்.
    மாறாக தானே இழுத்துச் செய்யும் மாமியாரும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு மாமியார் கிடைத்தவர் மிகுந்த அதிர்ஷ்டம் உள்ளவர். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு
    2. உண்மைதான். ரொம்பவே மிஸ் பண்றேன் மாமியை. ;((

      நீக்கு
    3. ம்ம்..புரிகிறது.. வருத்தப்படாதீங்க இமா!

      நீக்கு
  9. ***தன் நிறுத்தம் வந்ததை உணர்ந்து இறங்கிய அமலாவின் மனம் பட்ட பாடு யாருக்குப் புரியும்?**

    மாமியார், நாத்தனார், அமலா மூவரும் பெண்களே. வருண் கண்டு பிடிச்சுட்டான்!!! :)))
    இதில் அமலா பக்கம் நியாயம் இருப்பதும், தங்கை செய்வது தப்பு என்று தெரிந்தாலும், அம்மா ஏன் இப்படி அநியாயமாக நடந்துக்கிறாங்கனு புரிந்தாலும், அமலாவின் கணவன் நிலைப்பாடுதான் பரித்தாபத்திற்குரியது.

    தங்கையை கண்டித்த்தால், நேத்து வந்த பெண்டாட்டி சொல்றபடி ஆடுறான் என்பார்கள் அன்புள்ள அம்மா அழுகையுடன்..

    அம்மாவின் தவறை எடுத்து அம்மாவிடமே சொன்னால், அம்மா அழுகையுடன் நீ ரொம்ப மாரிட்டனு சொல்லுவாங்க..

    "எங்க அம்மா அநியாயமாத்தான் நடதுக்கிறாங்க, நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்போ" னு அமலாவிடம் சொன்னால்.. அமலாவின் அதிருப்தியைத்தான் அவள் முகத்தில் பார்ப்பான்.

    மூன்று பெண்கள் இடையில் இந்த அமலா கணவன் நிலைமை இருக்கே அது அமலாவின் நிலையைவிட பலமடங்கு மோசமானதுனு நீங்க எல்லாரும் தெரிநது கொண்டால் நல்லது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான்..மூன்று விதமாகவும் நடக்கத்தான் செய்கிறது. அனைத்து தரப்பினரிடமும் புரிதலும் மனமாற்றமும் வேண்டும். ஒவ்வொரு கோணத்திற்கும் என்று இன்னும் பல கதைகள் எழுதலாம். இந்தக் கதை மருமகள் பார்வையில் அமைந்தது, அவ்வளவே.
      உங்கள் கருத்திற்கு நன்றி வருண்.

      நீக்கு
  10. ஹ்ம்ம்.. அழமான கதை...உண்மை...மாமியார் பதவி கொடுகின்ற மோகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்...மாமியார் சும்மா இருந்தாலும் ஏத்திவிட சில பேரு இருப்பாங்க..
      உங்கள் கருத்திற்கு நன்றி ஸ்ரீனி!

      நீக்கு
  11. நானும் இதைப்பற்றித்தான் இன்றொரு பதிவு எழுதியுள்ளேன்..உங்கள் உணர்வுகள் நிச்சயம் மதிக்கப்பட வேண்டியவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி பல!
      உங்கள் தளம் வந்து பார்க்கிறேன், நன்றி!

      நீக்கு
  12. arumai நல்லா இருக்கு எல்லா மாமியும் அப்படி அல்லவே
    எல்லா நாத்தி யும் அப்படியா ?
    இப்படியும் இருக்காங்க அப்படியும் இருக்காங்க என் கருத்து என்னன்னா நல்ல மாமியாரு / மருமக பத்தி ஒரு கதை எழுதி வெளியிட ஏன் யாரும் முன் வரல அத செய்ய நல் எண்ணம் பரவும் கவிஞர் / கதாசிரியர் செம்பொருள் ஆக கதை யை பாவிக்கணும் அத விட்டு விட்டு பரபரப்பான ஊடக செய்திகள் போல இடுதல் ஏனோ ? குறைஞ்ச பட்சம் கவிஞர்களாவது இதை முன்னெடுக்கலாம் இல்லிய்யா வலையில் இட விவேக் பணி தவிர்க்க அழகு மெருகிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவிஞர் ara.
      எல்லா மாமியும் எல்லா நாத்தியும் அப்படி இல்லைதான். ஆனால் பெரும்பாலோர் அப்படித்தான் இருக்கின்றனர். இந்நிலை மாறி அனைவரும் நன்றாக இருக்கும் சமுதாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்குத் தேவையான மாற்றம் பற்றி சொல்வதே இக்கதை. நான் கேட்ட/பார்த்த வரை முப்பது சதவிகிதம் தான் நீங்கள் சொல்வதுபோல் இருக்கின்றனர். அதுவும் படித்த மக்களிடையே..இன்னும் போய் ஆராய்ச்சி செய்தால் இதுவும் குறைந்துவிடும். ஐம்பது சதவிகிதம் ஆகட்டும், நீங்கள் சொல்வதுபோல் எழுதுவேன். நன்றி.

      நீக்கு
  13. இனி வரும் சமுதாயத்தில் அப்படி இருக்காது என நம்புவோம், நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அப்படியே நம்புவோம். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. செல்லம் கொடுப்பது என்பது சில பேருக்கெ என்றாலும் எங்கள் நாளில் போதித்தே அனுப்புவார்கள் எப்படிப் பொறுமையாகப் பழகணும் என்று. இன்று எங்கள் வீட்டில் இப்போது நல்லபடியாக இருக்கிறார்கள். மகளுக்கும் மருமகளுக்கும் அதே பாகுபாடில்லாத அருமைதான். எனக்குத்தான் அமையவில்லை ,இவர்களாவது நன்றாக இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. மருமகள் பாதிக்கப் பட்டால் மகனும் பாதிக்கப் படுவான் என்று தெரிகிறதே. பெரியவர்கள் தான் அறிந்து செயல் படவேண்டும்.

      நீக்கு
    3. உங்கள் வீட்டில் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பது மகிழ்ச்சி! உண்மைதான், மருமகள் பாதிக்கப்பட்டால் மகனும் தானே பாதிக்கப்படுவான்!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்மா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...