ஐ ஸ்பீக் இங்கிலீஷ், ஷால் ஐ டெல் யூ அபௌட் தமிழ்?

நற்றிணை நல்ல குறுந்தொகை அறிவாயோ
ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து அறிவாயோ
ஓங்கு பரிபாடல் படித்தாயோ
கற்றறிந்தார் ஏற்றும் கலித்தொகை கண்டாயோ
அகம் புறம் என்று இரு நானூறு பயின்றாயோ
இந்த எட்டுத்தொகையும் சொல்லும்  அகம் புறம் பற்றி அறிவாயோ!

முருகராற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
மலைப்படுகடாம் மதுரைக்காஞ்சி
குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு
பட்டினப்பாலை  நெடுநல்வாடை
என்று பத்துப் பாட்டும்  சொல்லும் இயற்கையும் வாழ்வும் அறிவாயோ!

இவை ஏதும் அறியாமல் 'ஹலோ' 'ஹாய்' என்று சிலாகித்து
'ஐ ஸ்பீக் இங்கிலீஷ் ' என்று வெட்டி பெருமை பாராட்டிக் கொண்டு
கண் மூடியிருக்கும் தமிழா!
நீதி நூல்களும் இலக்கியச் செல்வமும் நிறைந்த தமிழைப் பார்!
படித்து அறிந்து கண்ணைத் திற! உண்மையான பெருமை கொள்!
'ஐ ஸ்பீக் இங்கிலீஷ், ஷால் ஐ டெல் யூ அபௌட் தமிழ்'
என்று இறுமாந்து தாய் மொழியை எவ்விடமும் கொண்டு செல்வாயோ!




ஏற்பது இகழ்ச்சி

உதயன் என்று ஒரு சிறுவன் தன் தாய் தந்தையோடு வசித்து வந்தான். ஏழ்மையான குடும்பம். உதயனுடைய தந்தை கட்டிடத் தொழில் செய்யப் போவார். தாயார் சில வீடுகளில் பாத்திரம் தேய்த்துக் குடும்பச் செலவுகளுக்குக்  கொஞ்சம் பணம் சம்பாதிப்பார். இந்த நிலையில் உதயனின் பெற்றோர் அவனை நன்றாகப்  படித்து முன்னேற வேண்டும் என்று சொல்லி ஊக்குவித்தனர். அவனும் பொறுப்பை உணர்ந்து நன்றாகப் படித்து வந்தான்.

திடீரென்று கட்டிட வேலைகள் சரிவரக் கிடைக்காமல் அவன் தந்தை தவித்தார். இந்தச் சூழ்நிலையில் உதயனுக்கு ஒரு பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. தன் வீட்டு நிலைமை தெரிந்திருந்த உதயன் பெற்றோரிடம் பணம் கேட்க விரும்பவில்லை. என்ன செய்வது என்ற கவலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன் ஆசிரியரைப் பார்த்தான். ஆசிரியர் அவனிடம், "உதயா, பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டுமே, தேவை என்றால் நான் உதவட்டுமா?" என்று கேட்டார். உதயன் அவரிடம், "மிக்க நன்றி ஐயா! ஆனால் மன்னித்துக் கொள்ளுங்கள். சும்மா பணத்தை ஏற்பதற்கு எனக்கு மனம் இடம் அளிக்கவில்லை. நான் செய்யக்கூடிய ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் ஐயா, அதைச் செய்து பணம் கட்டிக்கொள்ளப்பார்க்கிறேன்" என்று சொன்னான். அவனைப் பெருமிதத்துடன் பார்த்த ஆசிரியர், "சரி, தெரிந்தால் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள் உதயனை அழைத்த அவர், "தெரிந்த ஒருவர் வீட்டில் உள்ள ஒரு நான்கு வயதுச் சிறுவனை தினமும் மாலையில் 2 மணி நேரம் பார்த்துக் கொள்ளவேண்டுமாம், செய்கிறாயா?" என்று கேட்டார். உதயனும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். பரிட்சைக்குக் கட்டப் பணமும் சம்பாதித்தான். தன் வறுமையிலும் தேவையின்போதும் "ஏற்பது இகழ்ச்சி" என்ற அவ்வைப் பாட்டியின் அறிவுரைக்கு ஏற்ப செயல்பட்ட உதயனை ஆசிரியர் பாராட்டினார்.

ஒன்றும் செய்யாமல் யாரிடமாவது உதவி பெறுவது இகழ்ச்சி. அதைவிட தன்னால் நல்ல வழியில் முடிந்ததைச் செய்து பணம் ஈட்டுவது தான் நல்லது.

பாக்கெட் மணி

இன்றைய இளைஞர்கள் பாக்கெட் மணி மிகவும் அவசியம் என்கின்றனர். சரி, சில செலவுகளுக்கு கையில் பணம் இருப்பது நல்லதுதான். ஆனால் இளைஞர்கள் செய்யும் செலவுகள் அவசியமானதா? சேர்ந்து உணவகங்களில் சாப்பிடுவதற்கும் ஊரைச் சுற்றுவதற்கும் நண்பர்களுக்கு அன்பளிப்பு வாங்குவதற்கும் பணம் வேண்டுமாம். பணம் வேண்டும் என்று சொல்வதில் கூட நான் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் அவர்கள் கேட்கும் தோரணையிலும் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்பதிலும்  ஒரு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
அளவுக்கு அதிகமான பணம், அதுவும் அனாவசியச் செலவுகளுக்கு, இப்படி பணம் கேட்டு அதை நியாயப்படுத்துகிறார்கள். இளைஞர்களின் இந்த சிந்தனை இல்லாமை மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவராவது இல்லார்க்கு உதவி செய்ய எனக்கு பணம் வேண்டும், எனக்கு நிறைய பணம் இருக்கிறது அதனால் ஏழைகளுக்கு உதவுவேன் என்று ஒருவரும் சொல்லவில்லை. பெற்றோர்களின் தவறும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். பணத்தின் அருமையை, பணம் இருப்பதன் நன்மையை, வறியவரும் இருப்பதை, வறியவர்க்கு உதவுவதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுக்கின்றோமா? பணம் இருப்பதனால் அதிகச் செல்லம் கொடுத்து அதையும் இதையும் வாங்கிக்கொடுத்து ஒரு மாய உலகிலேயே குழந்தைகளை வளர்க்கின்றோமா? அளவோடு செலவு செய்து, தேவையானவற்றை வாங்கி, சமுதாயத்தில் பல நிலைகளில் உள்ளவரைப் பற்றிய ஒரு சிந்தனை உள்ளவராக குழந்தைகளை வளர்க்க வேண்டாமா?

பகுத்து உண்டு வாழ்வதை திருவள்ளுவர் இப்படிச் சொல்லிச்சென்றார்...
"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல"
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருந்தாலும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது. பிறருக்கு கொடுத்து வாழ்வதை,

"இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் "
குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது (பயன்படுத்துவது) கையேந்தி இரத்தலைக் காட்டிலும் கொடுமையானது.

ஆனால் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் நமக்கு என்ன கவலை? வறியவரைப் பற்றி எதற்கு சிந்திக்க வேண்டும்? பணம் இருக்கிறது, உண்டு களித்து மகிழ்வேன் என்றுதானே நம் சிந்தனை இருக்கிறது!!!!

குழந்தைகள் கற்றுக்கொடுத்தால் அருமையாகக் கற்றுக் கொள்வார்கள். இன்றைய குழந்தைகள் தான் நாளைய இளைஞர்கள். அவர்களைச் சரியான வழி நடத்துவதில் பெற்றோரின் பங்கு தலையானது.
நல்லதொரு சமுதாயம் செய்வோம்!

வண்ண பட்டாம்பூச்சி

வண்ண பட்டாம்பூச்சி! வண்ண பட்டாம்பூச்சி!
நறுமணம் வீசும் மலரில் சிலையென நீ அமர்ந்திருந்தாயே
அந்த அழகைக் கண்டே மெய்மறந்தேன், நானே சிலையானேன்
சிட்டுக் குருவி தத்தி வந்தால் நான் என்ன செய்வேன்?
நொடியில் சிறகடித்துப் பறந்துச் சென்றாயே!
சிலையென இவள் என்ன செய்கிறாள் என்றே
குருவியும் தலையை ஆட்டி ஆட்டிப் பார்க்கிறது
வண்ணச் சிறகை விரித்தே நீ மீண்டும் அருகில் வா!

தொலை தொடர்பும் உறவுகளின் தொடர்பும்

தொலை தொடர்பு சாதனங்கள் மிகுந்து விஞ்ஞான வளர்ச்சி ஓங்கி இருந்தாலும் உறவுகளின் தொடர்பு குறைந்து விட்டது என்ற தவிர்க்க முடியாத உண்மை அவ்வப்பொழுது மனதை வருத்தும்.

நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே!
நிலவு ஒளியில் கூட்டாஞ்சோறு உண்டு  
நான்கு தலைகள் அம்மா மடியில் இருத்தி 
கைகளைப் பூ போல் சேர்த்து நிலாப் பாடல்கள் பாடி
அதனைக் கண்டு சிரித்த விண்மீன்களை எண்ணிக் 
கூடி இன்புற்று இருந்த காலம் கனவென 
கணினியில் தொலைந்தது கண்டு நோம் என் நெஞ்சே!
தொலை தொடர்பு மிகுந்து அருகே தொடர்பு அறுந்து 
வாழும் வாழ்க்கை கண்டு நோம் என் நெஞ்சே!

இதற்கு என்ன வழி? எங்கே கோடு போடுவது? எப்படிப்  போடுவது? என்ற கேள்விகளுக்கு எளிதாக விடை கிடைப்பதில்லை. மேலே உள்ள பாடலை வரைவாக வைத்து யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த நேரத்தில்  நான் பின்பற்றும் ஒரு வலைப்பதிவில் அந்த நண்பர் "தொலைதொடர்பு அடர்த்தி"  என்ற தலைப்பில் ஒரு இடுகை பதிவு செய்திருக்கிறார். அதைப் படித்தவுடன் எனக்கு ஒரு முல்லைப்பாட்டின் பாடல் நினைவு வருகிறது. அதையும் சேர்த்து இப்பதிவை வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.

"சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
 உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் 
நடுங்குசுவல் அசைத்த கையள், "கைய 
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர, 
இன்னே வருகுவர், தாயர்" என்போள் 
நன்னர் நன்மொழி கேட்டனம்; அதனால் 
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர் 
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து 
வருதல், தலைவர், வாய்வது; நீநின் 
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என 
காட்டவும் காட்டவும் காணாள் , கலுழ்சிறந்து
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப "
--முல்லைப்பாட்டு அடிகள் 12 -23 
(சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று முல்லைப்பாட்டு, இதில் மொத்தம் 103 அடிகள் உள்ளன)

தலைவனை எதிர்பார்த்து துயர் கொண்டிருந்த தலைவியைத் தேற்ற தோழி கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தாயைக் காணாமல் துயர் உற்றது. அதனைப் பார்த்து குளிரால் நடுங்கித் தோள்களைக் கைகளால் கட்டிக் கொண்டிருந்த ஆயர்குலப் பெண், "வளைந்த கோலினைக் கையில் வைத்துள்ள கோவலர் பின் நின்று செலுத்த உன் தாயார் இப்பொழுதே வருவாள்" என்று கூறிய நன்மை தரும் சொல்லைக் கேட்டோம்.
நல்லவர்களின் நல்ல சொல்லைக் கேட்டதனால், பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து போரினை இனிதே முடித்து தலைவன் வருவான். இது உண்மை. நீ துன்பத்தால் எழுந்த வருத்தத்தைக்  களைவாயாக!மாந்தளிரின் நிறம் உடையவளே! என தலைவியிடம் மீண்டும் வற்புறுத்திக் கூறவும், தலைவி ஆற்றாளாய் அழுகை மிகுந்து குவளை மலர்ப் போன்ற மையிட்ட கண்களில் முத்துப் போன்ற நீர்த்துளிக்க வருத்தத்தில் இருந்தாள்.

பிரிவில் ஏக்கமும் அன்பும் மிகுந்து, தலைவனை எதிர்பார்த்து இருந்த தலைவி. அவள் துயரைப் புரிந்து தேற்றும் அன்புடைய தோழி. இவர்கள் இருவரும் பார்க்கும் இயற்கையின் குறிப்புகள். கன்றின் துயரையும் புரிந்து அன்புடன் தேற்றும் ஆயர்குலப் பெண். இவ்வாறாக அழகானஒரு வாழ்வியல் பாடல் இது.

ஆனால் இன்று, எளிதாக அழைக்க ஒரு அலைபேசி. அதனை எடுக்கவும் நேரம் இல்லாத் தலைவன். கோபம் மிகும் தலைவி. ஆறுதல் சொல்லத் தோழியா? அனைவரும் ஓடும் ஓட்டத்தில் யாருக்கும் யாருக்காகவும் நேரம் இல்லை.
மேலும் சிந்திப்பதை இந்தப் பதிவைப்  படிப்பவர்களுக்கு விட்டு விடுகிறேன்!
எங்கோ ஒரு சிறு மாற்றம் நேர்ந்தால், சிறு மாற்றங்கள் சேர்ந்து நல்ல மாற்றமாக அமையும் என்றும் நம்புகிறேன். என் பிள்ளைகளுடன் விளையாடச் செல்கிறேன்...

நண்பரின் பதிவிற்குச்  செல்ல: http://www.gunathamizh.com/2012/11/blog-post_21.html
நன்றி முனைவரே!

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபங்கள் ஏற்றும் தீபாவளித் திருநாளில்
புற இருளோடு அக இருளும் நீங்கி
தரணி முழுவதும் இன்பம் நிறையட்டும்!

தித்திக்கும் மகிழ்ச்சியின் வாழ்த்துகளில்
சமாதான வாழ்வு சம தர்மமாய்
அகிலம் முழுவதும் அன்பு பெருகட்டும்!

மனம் கனியும் இனிய வாழ்த்துகளில்
வறுமை நீங்கி வளமையாய்
உலகம் முழுவதும் செழிக்கட்டும்!


பாரதி சொல் கேளீர்!

அக்கம்பக்கத்து குழந்தைகள் ஒன்றாக விளையாட ஒரே சத்தமாக இருக்கும் என்னுடைய குழந்தைப்பருவம். எத்தனை குழந்தைகள் என்றே தெரியாது, அனைவரும் ஒன்று கூடி விளையாடுவோம். அந்த ஓட்டமும் விளையாட்டும், சிரிப்பும் சண்டைகளும் மனதில் இனிமையாய் பதிந்துள்ளன. இன்று அந்த சத்தம் கேட்கிறதா? தெருவில் நடந்து போனால் பலர் பேசுவதும் இசை மீட்டுவதும் கேட்கும்.ஆச்சர்யப்படாதீர்கள்! உண்மையாகச்  சத்தம் கேட்கும், ஆனால் தொலைக்காட்சியில்!!
ஓடி விளையாடு பாப்பா என்று அழகாகக் கற்றுக் கொடுத்தான் என் மரியாதைக்குரிய பாரதி. கூடி விளையாடவும் சொன்னான். இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதுமில்லை, கூடி விளையாடுவதுமில்லை. கணிப்பொரியுடனும் சந்தையில் உள்ள பல நிகழ் பட விளையாட்டுகளையும் தான் விளையாடுகின்றனர். சில வீடுகளில் அதற்கு கூட கூடுவதில்லை - அறைக்கு ஒரு தொலைக்காட்சி!
தொழில்நுட்ப வளர்ச்சியை அரவணைத்துக் கொள்ள வேண்டியதுதான், தவறில்லை. ஆனால் ஒரு வரையரை இருக்க வேண்டும். குழந்தைகள் ஓடி விளையாடுவதும் கூடி விளையாடுவதும் எந்த தொழிற்நுட்ப வளர்ச்சியினும் மேலான ஒன்று, மிகவும் தேவையான ஒன்று. 
படிப்பு, பட்டம், பணம் என்று இவற்றின் பின்னர் ஓடுவதையே வாழ்வாக்கி விட்டோம் நாம். இந்த ஓட்டத்தில் குழந்தைகளின், வருங்கால தலைமுறையினரின், மனித இனத்தின் ஆரோக்கியத்தை பின்னோக்கி ஓட வைக்கிறோம்.
"ஓடி விளையாடு பாப்பா 
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று சொன்ன பாரதி, "நெஞ்சு பொறுக்குதில்லையே..." என்று வருந்துமாறு இன்றைய குழந்தைகள் ஓடி விளையாடாமல் தொலைக்காட்சி முன்னால் ஓய்ந்திருப்பதுதான் அதிகம். சிந்திப்போம்!
பாரதியைப் பயின்றாலே, அவர் சொன்ன வழிகளைப் பின்பற்றினாலே சமுதாயம் ஏற்றம் பெறும் என்பது என் கருத்து. 
"ஒளி  படைத்த கண்ணினாய் வா", "காவியம் செய்வோம்",  என்று ஒவ்வொரு குழந்தையையும் அழைக்கிறார் பாரதி. மனதில் உறுதி பெற்று, நல்லவை எண்ணி, எண்ணியவை முடிக்க, நல்லதொரு புதிய சமுதாயம் செய்ய உறுதி எடுப்போம். வருங்கால தலைமுறையினரை வழிநடத்துவோம்.

புரிந்து கொள் மனிதா

ஒரு பக்கம் சாண்டி 
ஒரு பக்கம் நீலம் 
ஒரு பக்கம் பூகம்பம் 
இடையில் உன் வளர்ச்சிகள் கேள்விக்குறியாய்!

புரிந்து கொள் மனிதா 
மனித இனத்தின்  எல்லையை 
அனைத்திலும் மேலான சக்தி இறைவனை
எல்லையில்லா அவன் வலிமையை!

என் தமிழை, உலகமே கேள்!

என் தாய் மொழியாம் தமிழ் எவ்வளவு மேன்மை உடையது
பேசுவதற்கான ஒரு மொழி மட்டுமா என் தமிழ்?
இல்லை இல்லை - எவ்வளவு சிறப்பு மிக்கது 
என் வரலாறை இனிதாய்ச் சொல்கிறதே 
என் மூதாதையர் வாழ்வை கண் முன் விரிக்கிறதே
கடந்து சென்ற சில ஆண்டுகள் மட்டும் அல்ல 
என் வம்சத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளை 
என் முன்னோர் வாழ்ந்த இனிய அறம் மிக்க வாழ்வைச் சொல்கிறதே
இயற்கையோடு இணைந்த இனிய வாழ்வு முறையைச் சொல்கிறதே
இவ்வளவு சிறந்ததா என் குடி?
இவ்வளவு சிறந்ததா என் முன்னோர் வழி? 
இவ்வளவு தொன்மையானதா என் மொழி?
என் பிறப்பிலே எனக்கு அகந்தை அளிக்கிறதே 
என் மொழி தமிழ் என்பதால் அணுக்களில் ஒரு பரவசம் பாய்கிறதே 
குருதியில் ஒரு புத்துணர்ச்சி ஓடுகிறதே!
உலகமே கேள்! பிற மொழியினரே கேளுங்கள்!
என் இனிய தமிழ் மொழியை அறிந்து கொள்ளுங்கள் 
என்று முழங்கும் இறுமாப்புத் தருகிறதே
மகிழ்ச்சியில் கண்கள் குளமாகின்றனவே 
என் தமிழே! என் தமிழே! என இதயம் துடிக்கிறதே
தமிழை உயர்த்த சிறுபிள்ளை நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை 
ஆனால் கட்டித் தழுவி என்னுடன் வைத்துக் கொள்வேனே 
பாருங்கள் என் பெருமையை என்று பறை சாற்றிக் கொள்வேனே!
என் தமிழை அதன் தொன்மையை அதன் பெருமையை 
மென்மேலும் கற்பேனே உலகமெல்லாம் சொல்வேனே 
இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாம் தமிழில் சேர்ப்பேனே 
புதிய கண்டுபிடிப்புகள் தமிழில் செய்வேனே 
உலக மனிதரெல்லாம் தமிழ் அறிவார் என்ற நாள் வரும் 
அன்று என் தமிழ் அன்னை பூரித்து மேலும் செழிப்பாளே!

அணிலே அணிலே


அணிலே அணிலே பயம் கொள்ளாதே
பருப்பைத் திங்க ஓடி வந்தாய்
என்னைப் பார்த்து தயங்குவது ஏன்?
செவிகளை விடைத்து நிற்பதும் ஏன்?
உன் கரு கரு கண்கள் கவர்கிறதே
உன் மெது மெது வால் ஈர்க்கிறதே
பயப்படாமல் பருப்பை நீ தின்னு
நீ தின்னும் அழகைப் பார்க்க விடு!

மழை

குழாயை யார் திறக்கிறார் என்று தெரியாது 
எத்தனை குழாய்கள்? அதுவும் தெரியாது 
இவ்வளவு தண்ணீர் ஊற்றுகிறதே 
நான் குடிக்க பயன்படுகிறது 
நான் குளிக்க பயன்படுகிறது
செடி வளர பயன்படுகிறது
விலங்கும் பறவையும் குடிக்கிறது 
அது தான் பயன் மிகுந்த மழை!

நான்கு வயது குழந்தை மேடையில் மழை பற்றி சொல்வதற்காக எழுதியது. நிறைய சிறுவர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.
 

கோபம்

 பூங்குழலிக்குச்  சோர்வாக இருந்தது. குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு அன்று மதியம்தான் வீடு திரும்பியிருந்தனர். வந்தவுடன் குளித்துவிட்டு இரு பிள்ளைகளையும் குளிக்க வைத்துவிட்டு வந்தாள். கொஞ்சம் ஓய்வு கொடேன் என்று கெஞ்சிய கால்களை அலட்சியம் செய்துவிட்டு சமையலறை சென்றாள். ஏதோ செய்ய வேண்டுமே என்பதற்காக  தக்காளி சாதம் கிளறினாள். ஒரு வழியாக சாப்பாட்டு வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று அமர்ந்தாள். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. மகளிடம் தொலைகாட்சிப் பெட்டிக்கு தடை விதித்து வீட்டுப்பாடம் செய்யச்  சொன்னவள் கண்ணயர்ந்து போனாள். பட படவென்று விளையாட்டுச்  சாமான் விழும் சத்தம் கேட்டு விழித்தவள் மகளின் முதுகில் ஒரு அடி வைத்தாள். "டயர்டா இருக்குனு கொஞ்ச நேரம் படுக்க முடியுதா? அமைதியா இருக்க மாட்டியா? போய் மூலைல உக்காரு..எப்பப் பாரு சத்தம் போட்டுக்கிட்டு..." என்று கத்தியவள் சுய உணர்வுக்கு வந்தாள். எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? தனக்கு அயர்வாக இருந்தால் தான் தூங்க வேண்டும் என்றால் குழந்தை பொம்மை போலவா இருக்க முடியும்? பாவம், டிவியும் போடாமல் விளையாடவும் இல்லாமல் என்ன செய்வாள் குழந்தை. கத்தி விட்டேனே. ஆறுவது சினம் என்று சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதுமா? பூங்குழலிக்கு தன் மேலேயே வெறுப்பாக வந்தது. எவ்வளவு பயந்து விட்டாள் குழந்தை! பாழாய்ப்போன இந்த கோபம் ஏன் தான் அறிவை மறைக்கிறதோ. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தாள். மகளை அழைத்து சமாதானம் செய்ய நினைத்துக்கொண்டு அழைத்தாள். இரண்டு முறை கூப்பிட்டும் பதில் இல்லாமல் போகவே "எத்தன தடவ கூப்டுறது? கூப்டா என்னனு கேக்க மாட்டியா?..." அடப்பாவமே!

சிறுமழைத் தாளம்

கருக்கலில் வானம் பகலவனை எதிர்பார்த்திருக்க
மாணவரும் பெற்றோரும் பள்ளிப் பேருந்திற்குக் காத்திருக்க
கார் மேகங்கள் குழந்தைகளைக் கண்டு உள்ளக் கிளர்ச்சி கொண்டனவோ
சட சடவென வான் முகந்த நீரை  வெண் முத்துக்களாய்ச் சிதறித் தாளமிட
குழந்தைகள் குதூகலித்தே துள்ள பெற்றோர் ஐயோ மழை என்று பதற
மனம் தடுமாறிய மேகங்கள் தாளத்தை நிறுத்தி நகர்ந்தனவே!


எண்கள் பாட்டு

ஒன்று -என் முகம் ஒன்று
இரண்டு -என் கண்கள் இரண்டு
மூன்று - இனிய தமிழ் மூன்று
நான்கு -  மறை  நான்கு
ஐந்து - புலன் ஐந்து
ஆறு - சுவை ஆறு
ஏழு - (இசையின்) சுரம் ஏழு
எட்டு - திசை எட்டு
ஒன்பது - முகபாவம் ஒன்பது
பத்து - கை விரல்கள் பத்து

என் குட்டிப் பையனுக்கு விளையாட்டாகக் கற்றுக் கொடுத்தது..இசையின் சுரம் ஏழு அவனுக்கு இப்பொழுது பெரிதாக இருப்பதால் சுரம் ஏழு மட்டும் அவனுக்கு. அதனால் 'இசையின்' அடைப்புக்குறிக்குள் இருக்கிறது!  :-) 

ஊக்கமது கைவிடேல்

அகிலாவும் மஞ்சுவும் தோழிகள். இருவருக்கும் பத்து வயது. அவர்கள் பள்ளியில் விளையாட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்தனர். அகிலாவுக்கும் மஞ்சுவுக்கும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. தங்கள் பெயரை விளையாட்டு ஆசிரியரிடம் கொடுத்து விட்டு பயிற்சிக்குச் சென்றனர். திடலில் ஐம்பதடி இடைவெளியில் இரு கோடுகள் போட்ட ஆசிரியர், குழந்தைகளை ஒரு கோட்டிலிருந்து மறு கோடுவரை ஓடச் சொன்னார். அகிலாவும் மஞ்சுவும் மற்ற குழந்தைகளுடன் ஆவலாக ஓட ஆரம்பித்தனர். பாதி வழியில் அகிலா தடுமாறி விழுந்துவிட்டாள். இன்னும் சிறிது தொலைவில் மஞ்சுவும் விழுந்துவிட்டாள். பயிற்சி முடிந்து வகுப்பறை செல்லும்பொழுது அகிலா மஞ்சுவிடம், "நான் ஓட்டப்பந்தயத்தில் ஓட விரும்பவில்லை. விழுந்து விடுவேன்" என்று சொன்னாள். பயிற்சி செய்யலாம் பரவாயில்லை என்று மஞ்சு சொன்னதை அகிலா கேட்கவில்லை. ஆனால் மஞ்சு விடாமல் தினமும் பயிற்சி செய்தாள். பல முறை விழுந்தும் அவள் பயிற்சியை விடவில்லை. ஓட்டப்பந்தயத்திலிருந்து பின்வாங்கவில்லை.
விளையாட்டு விழாவும் வந்தது. மஞ்சு இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றாள். அகிலா மகிழ்ச்சியுடன் கைதட்டினாள். விளையாட்டு விழாவின் இறுதியில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்டது. பரிசு வாங்கிய மஞ்சு அகிலாவிடம் வந்து,"நீயும் ஓடியிருக்கலாம் அகிலா. நான் அடுத்தமுறை முதல் பரிசு வாங்க பயிற்சி செய்யப்போகிறேன்" என்றாள். அவளைப் பாராட்டிய விளையாட்டு ஆசிரியர் அகிலாவிடம் , "மஞ்சு விழுந்தாலும் ஊக்கம் குறையாமல் பயிற்சி செய்து வெற்றியும் பெற்று விட்டாள். நீயும் ஊக்கம் விடாமல் இருக்க கற்றுக்கொள்" என்றார். அகிலா புரிந்து கொண்டு சரி என்று சொன்னாள்.
நீங்களும் புரிந்து கொண்டீர்களா குழந்தைகளே? "ஊக்கமது கைவிடேல்" என்று அவ்வைப் பாட்டி சொன்னதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு மூன்று வரிகளில்...

பூச்செடியின் கோபம்
பூச்செடி பூக்கள் தரமாட்டேன் என்று கோபித்துக் கொண்டது
நீ என்னை இகழவே உன் அவளிடம் பூக்களைக் கொடுக்கிறாய் என்று!

முதல் காதல்
அடடா இது அல்லவோ இன்பமான சுகம்
இத்தனை நாட்கள் ஏமாற்றி விட்டாயே தென்றலே!

தொழில் நுட்பம்
இன்று வந்து நாளை போகின்றன சாதனங்கள்
தொழில் நுட்ப வளர்ச்சி!

இனிய முரண்
நேற்று நிலா உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது என்றேன், நம்பினான்
'அம்மா உனக்கொன்றும் தெரியாது' என்று இன்று சொல்லும் என் மகன்!

எதிர்பார்ப்பு
என் அம்மா சமையலுக்கு ஈடாகுமா என்ற கணவரின் எண்ணம் மாற எதிர்பார்த்தேன்
மாறியது, "என் மகள் அம்மாவை மிஞ்சிவிட்டாள்' என்று!
இடையில் நான் தொலைந்து போய் விட்டேன்!  

என்றும் தவறா தூதர்கள்

இன்றைய வியக்க வைக்கும் சாதனைகளாம்
அலைபேசி, ஊடகத் தொடர்பு, முகநூல்
இவை ஒன்றும் வெற்றி பெற முடியவில்லை
எங்கோ காட்டில் முகாமிட்டிருந்த
என் தலைவனைத் தொடர்பு கொள்ள

என்றும் தவறா தூதர்களாய் இருக்கும்
நிலவே, மேகமே, காற்றே
நீங்கள் சென்று பார்ப்பீர்களா
என் தலைவன் சுகமா என்று?

என் தமிழ்! என் அடையாளம்!

எனக்கு என்று ஒரு அடையாளம் உண்டு
என் தாய், என் தந்தை, என் தாய் மொழி,
என் ஊர், என் நாடு என்று
இவற்றில் எதை விட்டுக் கொடுத்தாலும் 
என் அடையாளம் அழிந்து விடும்
ஆனால் இன்று பெரிதும் ஒதுக்கப் படுவது
தாய் மொழியாம் தமிழ் மொழி!

நம் தாய் மொழி நம் நாவில் சீராக இல்லாவிட்டால்
நம் தமிழ்த் தாய் நம் வீட்டில் ஆட்சி செய்யாவிட்டால்
நம் தேன் தமிழை  நம் குழந்தைகள் ருசிக்காவிட்டால்
நம் ஓங்கு தமிழ் எழுத்துகள் நம் விரல்களில் ஆடாவிட்டால்
நம் செம்மையான தமிழ்க் கருவூலத்தை நாம் மறந்தால்
ஐயோ! வெட்கக்கேடு, தன்மானக் கேடு!

'நான்' என்பதை இழந்து பல செல்வம் திரட்டினாலும் என்ன பயன்?
மேடைக்கு முகமூடி அணியலாம் அதுவே வாழ்வானால்?
சிந்திப்போம், செயல்படுவோம்!
தமிழ் மேன்மை அடைய உழைக்க வேண்டாம்
ஏன் என்றால் அதன் மேன்மை மிகப் பெரிது
அதனைக் கீழே இறக்காமல் இருந்தால்
அதுவே நாம் செய்யும் பெரும் பணி!

தமிழ் என் தாய் மொழி! என் பண்பாடு, என் வாழ்க்கை!
எனக்கும் என் சந்ததிக்கும் அதுவே முதன்மை!
இதனை மறக்காமல் வாழ்வது என் கடமை!
இப்படி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் அதுவே மேன்மை!

புன்னகை

சத்தமின்றி இனிதாய்ப் பல கதை சொல்லும்
போரின்றி எளிதாய்ப் பல சிக்கல் தீர்த்து விடும்
மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் ஒளிரச் செய்யும்
மொழி வரம்பு ஏதுமின்றி அனைவர்க்கும் புரிந்து விடும்

இது ஆற்றும் செயலோ மிகவும் வலியது
ஆனால் இதை உண்டாக்கும் தசைகளோ மெலியது
ஏழை பணக்காரர் ஆண் பெண் இப்படி எந்தப் பாகுபாடுமில்லை
இதை உடைமையாக்கக் கடிது உழைக்கத் தேவையில்லை

குழந்தை முதல் முதியவர் வரை அணியக் கூடிய நகை
விலை மதிப்பில்லாத அழகு சேர்க்கும் நகை 
ஈடு இணை இல்லாப் பொன்னகை
அது தான் அழகு நகை - புன்னகை!

பாரதிக்குப் புகழுரை

இன்று பெருமைக்குரிய பெரும் புலவன் பாரதிக்கு நினைவு நாள்
அவன் படைத்தது எத்தனைப் படைப்புகள்
விட்டுச் சென்றது எத்தனை நினைவுகள்
அவனுக்கு இருந்தது எத்தனை உயர்ந்த கனவுகள்
அவனுடைய சமூகச் சிந்தனை எத்தனை அருமை
அவனுக்கு இருந்த தொலை நோக்கு எத்தனை வியப்பு

பல கவிஞர் புகழும் பெருமையும் பெற்றுள்ளனர்
ஆனால் பாரதி போல பல பரிமாணங்களில் படைத்தவர் யார்?
இயற்கை சமூகம் பக்தி நாடு மக்கள் உயிர்கள் என்று
வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் ஆழமாகத் தொட்டவர் யார்?
புலவன் மட்டும் இல்லை சுதந்திர போராட்டத் தலைவனாய்
சமூக ஆர்வலனாய் பத்திரிகை ஆசிரியனாய்ப் பல பணிகள்
உள்ளப் பூர்வமாய் ஆற்றிய பாரதிக்குப்  புகழ்ப்பா எழுத விழைகிறேன்
அது அவ்வளவு எளிதானதல்ல என்று அறிந்தே!

ஓடி விளையாடு பாப்பா என்று அன்பாக அறிவுறுத்திய பாரதி
அச்சமில்லை அச்சமில்லை என்று தைரியம் கொடுத்த  பாரதி
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்று சீறிய பாரதி
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று ஏங்கிய பாரதி
ஜெயப் பேரிகை முழங்கடா என்று வெற்றி முழக்கம் செய்த பாரதி
காக்கைக் குருவி என் சாதி என்று அனைத்து உயிரும் ஒன்றென்ற  பாரதி
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று மனம் வெதும்பிய பாரதி
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு என்று காதலில் உருகிய பாரதி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்று தொலை நோக்கம் கொண்ட பாரதி
எத்தனை விதமான உணர்வுகள்
பரந்து விரிந்த எண்ணங்கள்!

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நன்னாடு
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாடு
என்றுப் பாடியதில் நாட்டுப் பற்றும்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதானது எங்கும் காணோம் என்பதில் மொழிப் பற்றும்
சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்பதில் மழலை இன்பமும்
காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று பக்திப் பரவசமும் 
செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என்றதில் பெண் முன்னேற்றமும்
இடையின்றி அணுக்களெல்லாம் சுழலும் எனக் கேட்டோம் என்று அறிவியலும்
இப்படி பலவும் எளிதாகப் பாடிச் சென்று விட்டான்
இப்பூமியில் அவன் வாழ்ந்த முப்பத்தி ஒன்பது ஆண்டுகளில்
அவனைப் புகழ்ந்து ஒன்று பாட நான் திணறுகின்றேன்!

தாமரை இலை நீர்


வாழ்வைச்  சுமையாக்க அவ்வப்போது தலை தூக்கும்
துன்பங்களைக் கலங்காமல் தள்ளும் மனம் வேண்டும்;

பற்றிக் கொள்ள எளிதாக சுற்றி இருக்கும்
தீயவற்றை ஏற்காமல் தள்ளும் குணம் வேண்டும்;

சூழல் முழுதாக அமிழ்த்தினும் நிலை மாறாமல்
தீமைகளை உள்வாங்காமல் இருக்க வேண்டும்;

சுருக்கமாக துன்பங்கள் தீமைகள் எல்லாம்
தாமரை இலை நீராக  அகற்றும் மனம் வேண்டும்!

மழை

கருமையான சாலையில் விழுந்து சிதறிய  நீர்த் துளிகள்
கண்ணகியின் சிலம்பிலிருந்து  சிதறிய முத்துக்கள்;
கூரை மேல் மெலிதாக ஒலித்த பெயலின் ஓசை
கச்சேரியில் கேட்கும் இனிமையான மத்தள இசை;
கவிழ்ந்து நளினமாய் ஆடும் இலைகள்
கவின் காட்சியை ரசிக்கும் என் கண் இமைகள்;

உடையது விளம்பேல்

தென்றலுக்கு அன்று எட்டாவது பிறந்த நாள். அதனால் அன்று அம்மா அணிவித்துவிட்ட வளையலை உறங்கும் முன் கழற்றி வைத்து விட்டுப்  பாட்டியிடம் சென்றாள். பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்ட தென்றல், "அம்மா, என் தங்க வளையலைச் சன்னல் திண்டில் வைத்திருக்கிறேன், எடுத்துக்கோ" என்று சத்தமாகச் சொன்னாள். உடனே பாட்டி அவளிடம், "உன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் பற்றி சத்தமாகச் சொல்லக் கூடாதுடா" என்று சொன்னார். ஏன் பாட்டி என்று கேட்டாள் தென்றல். அதற்கு பாட்டி சொன்ன கதை இதோ.

ஒரு நாள் கூட்டமாக இருந்த ஒரு பேருந்தில் ஒருவர் தன் மகனுடன் ஏறினார்.
இருவரும் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்தனர். சிறிது நேரம் கழித்து ஓர் இடம் கிடைத்த பொழுது அங்குச் சென்று அமர்ந்தான் அந்தச் சிறுவன். அவனிடம் பையைக் கொடுத்த அவன் அப்பா, "பை பத்திரம், அதில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது" என்று சொன்னார். இது பேருந்தில் யாரிடமாவது திருடலாம் என்று ஏறி இருந்த ஒரு திருடனுக்கு கேட்டுவிட்டது. அந்தச் சிறுவன் அருகில் சென்ற அவன் கூட்டத்தில் சமயம் பார்த்துப் பையை எடுத்துக்கொண்டு இறங்கி ஓடி விட்டான்.

பாட்டி தென்றலிடம், "இதனால் தான் நம்மிடம் இருக்கும் பொருட்களைப் பற்றி சத்தமாகச் சொல்லக் கூடாது. அது நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் கேட்கும். சில சமயத்தில் நம்மைச் சிக்கலில் மாட்டி விடும். இதைத் தான் 'உடையது விளம்பேல்' என்று அவ்வைப் பாட்டியும் சொல்லியிருக்கிறாள்." என்று சொன்னார். புரிந்து கொண்ட தென்றல் சரி பாட்டி என்று சொன்னாள். நீங்களும் புரிந்து கொண்டீர்களா?

தாய்மையின் குழப்பம்

அம்மா என் கூட விளையாடு
அம்மா இது வேணும், அம்மா அது வேணும்
அம்மா இங்க வா, அம்மா அங்க போகலாம்
அம்மா டிவி பார்க்கவா, அம்மா சிஸ்டம்ல  விளையாடவா
அம்மா போரடிக்குது, யார் என் கூட விளாடுவா
இப்படி நீளும் அம்மாவை அழைக்கும் பட்டியல் 
சாப்பிட அழைக்கும்பொழுது, அம்மா பசிக்கலை
ஊட்ட முயன்றாலும் வாயைத் திறப்பதில்லை
பின்னர் சமைக்கும் பொழுது அம்மா சாக்லட் சாப்பிடவா

அரை மணி நேரம் படுக்கலாம் என்று நினைத்தால் 
அப்பொழுது வந்து அம்மா பசிக்குது..
எனக்கு டயர்டா இருக்கு, இப்போ ஒன்னும் இல்லை 
சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் எழுந்து சென்று 
முணுமுணுத்தாலும் ஊட்டும் இயல்பு தாய்மைக்கே உரியது
ஒவ்வொரு நிமிடம் கேட்கும் அம்மா
கொஞ்ச நேரம் நிம்மதியா வேலை செய்ய விடு
கூப்பிடக் கூடாது என்று கத்தி விட்டு வேலை தொடர்வது 
கத்தி விட்டேனே என்று வருந்துவது, இதுவும் இயல்பாகிப் போனது

விடுமுறை முடிந்து பள்ளி துவங்கப் போகிறது அடுத்த வாரம்
என் செல்லமே என் தங்கமே உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேனே
நீ இல்லாம எனக்கு போரடிக்குமே என்று சொல்லி
மனதில் பள்ளி அனுப்பாமல் இன்னும் இரண்டு வருடம் 
என் கூடவே இருந்தால் நல்லதே என்ற எண்ணம்
இதைக் கட்டியவரிடம் சொன்னால் 
அன்று அப்படி சொன்னே, இன்று இப்படி சொல்றே
உனக்கு வேறு வேலை இல்லை என்று அங்கலாய்ப்பார் 
இல்லை என்றால் சுவற்றிடம் பேசுகிறோமோ என்று எண்ண வைப்பார்
சரி, விடுங்கள் இதெல்லாம் அவர்களுக்குப் புரிய போவதில்லை
ஏன் என்றால் இது தாய்மைக்கே உரிய அன்பான குழப்பம்!

தலைவன் தலைவி பாகற்காய்

கரிய கூந்தலில் வெண் மலர் சூடி
கரங்களில் அணிந்து இருந்த தொடி
தாளம் எழுப்புமாறு தலைவி பாகற்காய்
நறுக்கிக் கொண்டு இருந்தாள் தலைவனுக்காய்

தலைவன் கசப்பான பாகற்காய் விரும்புகிறானே எப்படி 
மதி ஒத்த அவளின் மதியில் ஒரு எண்ணம் தோன்றியது
காந்தப் பண்பில் எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்குமே அப்படி 
கசப்பான பாகற்காய் இனிமையான தலைவனுக்குப் பிடிக்கிறது

சிரித்துக் கொண்ட அவள் மனதில் எழுந்தது ஒரு குரல்
தலைவனுக்குத் தலைவியைப்  பிடிக்குமே என்று
அவளின் மதி சொன்னது அனைத்துப் பொருட்களுக்கும் காந்தப் பண்பில்லை
அதனால் தன் இனிமையும் தலைவன் இனிமையும் சேர்ந்ததே என்று

இவ்வாறு எண்ணி உள்ளே சிரித்துக் கொண்டு
பக்குவமாய் உப்பும் காரமும் சேர்த்துக் கலந்து
பொன்னிறமாய் பொறித்து எடுத்த பாகற்காய்
இனிப்பது போலத் தோன்றுகிறதே எதற்காய்?

:-)

அருவி

நீரில் விளையாடி இளைப்பாறும் யானை மந்தையைப் போல்
காட்சி அளிக்கும் ஈரமான கரிய பெரிய பாறைகள்;
மரகதம் மற்றும் பச்சை மாணிக்க கற்களால் அமைத்த தடுப்புகள் போல்
இரு மருங்கிலும் மிடுக்காய் செழித்து உயர்ந்த பச்சை மரங்கள்;
வெற்றிவாகை சூடிய மன்னனுக்கு மக்கள் ஆரவாரிக்கும் ஒலியைப்  போல்
காற்றில் நிறைந்து ஒலித்த நீர் விழும் இனிய இரைச்சல்;
வீர மன்னனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுத் தெளித்த பன்னீர் போல் 
நெருங்குபவரை வரவேற்க எட்டுத் திசையும் சிதறித் தெளித்த நீர்த் துளிகள்;
விண் மீன்களை உருக்கி வானிலிருந்து ஊற்றிய வெள்ளிக் குழம்பைப் போல்
மலை உச்சியிலிருந்து வெண் புகை எழுப்பித் துள்ளி வீழும் அருவி!

ஈவது விலக்கேல்

அன்னம் இருபத்தி ஒன்று வயதான பட்டதாரிப் பெண். ஒரு தொழிற்சாலையில் பணி செய்து வந்தாள். இணை மேலாளராகப் பணி செய்த அவளுக்கு நல்ல ஊதியம் கிடைத்தது. பெற்றோருடன் வசித்துவந்த அவள் தன்னுடைய சிறு செலவுகள் போக மீதியைச் சேமித்து வந்தாள். ஒரு நாள் வேலை விசயமாக ஓர் இடத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பப் பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
ஒரு நிமிடத்தில், "அக்கா, செருப்புதான் போட்டுருக்கீங்களா? அதையே மெருகேற்றித் தருகிறேன், பாதி காசு தந்தால் போதும் அக்கா.", என்று அருகில் நின்ற ஒரு சிறுவன் சொன்னான். காலனியைச் சுத்தம் செய்து மெருகேற்றிக் கொடுத்துச் சம்பாதிக்கும் சிறுவன் அவன். பெயர் செல்வன். ம்ம்ம்...
மனதில் ஏதோ தோன்ற அன்னம் அந்தச் சிறுவனை அழைத்து, "நான் உன்னைப் படிக்க வைக்கிறேன். படிக்கிறாயா?" என்று கேட்டாள். அவனும் சில கேள்விகளுக்குப் பின்னர் சரி என்றான். அவன் தாயைச் சந்தித்த அன்னம் செல்வன் படிப்பதற்கு ஏற்ற ஏற்பாடு செய்தாள். மாதம் தோறும் செல்வனைச் சந்தித்துத் தேவையானதும் வாங்கிக் கொடுத்தாள். இரண்டு வருடம் ஓடிய பின்னர் ஒரு நாள் தொழிற்சாலை மூடப்பட்டது. வேலை இழந்த அன்னம் யோசித்தாள். செல்வன் படிப்புச் செலவை நிறுத்திவிடலாமா? என்று சிந்தித்தாள். "இல்லை, எனக்கு இன்னொரு வேலை தேடப்  படிப்பும் அறிவும் இருக்கின்றது, நான் படிக்க வைப்பதை நிறுத்திவிட்டால் செல்வன் மீண்டும் செருப்புத் துடைக்கச் சென்று,  முன்னேற முடியாமல் போய் விடுவான். தொடங்கிய நல்ல  காரியத்தை நிறுத்த வேண்டாம். சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். அவ்வை சொன்னதைப் பின்பற்றி ஈவதை விலக்க வேண்டாம்" என்று முடிவு எடுத்தாள். 'ஈவது விலக்கேல்' என்று அவளுக்குச் சொல்லிக் கொடுத்த அவள் பெற்றோரும் அதைத் தடுக்காமல் ஊக்குவித்தனர். செல்வன் இனிதே படிப்பைத் தொடர்ந்தான். அன்னத்துக்கும் வேறு நல்ல வேலை கிடைத்தது.

தேவையானவருக்குக் கொடுப்பதையும் உதவுவதையும் விலக்காமல் இருக்க வேண்டும். மற்றவர் செய்வதையும் தடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வையார் சொன்ன, வாழ்விற்குத் தேவையான மொழி இது. 

என் அன்பே! என் உயிரே

என் அன்பே! இனியவரே! என் வாழ்வே!
உங்களை எப்படிக் குறிப்பிட்டால் பொருந்தும்?

நீங்கள் என் இதயம் என்று சொல்லலாம்
ஆனால் ஒரு நாள் துடிப்பதை நிறுத்தி விடுமே!

நீங்கள் என் உடம்பில் ஓடும் குருதி என்று சொல்லலாம்
ஆனால் குருதி என் நகங்களில் நிறைவதில்லையே!

நீங்கள் என் மூச்சு என்று சொல்லலாம்
ஆனால் சுவாசத்தில் மூச்சை வெளி விடுவேனே!

நீங்கள் என் வாழ்க்கை என்று சொல்லலாம்
ஆனால் அது உங்களைப் போல் எப்பொழுதும் இனிமையாய் இருப்பதில்லையே!

நீங்கள் இறப்பிலும் பிரியாத என் ஆத்மா என்று சொல்கிறேன்
ஏனென்றால் நான் உங்களுக்கும் நீங்கள் எனக்கும் சொந்தம், எக்காலமும்!

வைகறைக் கடல்

யான் துயில் நீங்கிய ஓர் குளிர்ந்த வைகறைப் பொழுதில்
நடை பயில ஆர்வம் கொண்டு புணரியை நோக்கிச் சென்றேன்
நீலக் கடலின் திரை ஓசை செவியில் விழும் பொழுதில்
என் உண் கண் வியப்பில் விரிந்து  மின்னியது

யான் கண்ட காட்சியின் அழகை முழுதாக உள்வாங்கும் ஆசையில்
குளிர்ந்த மணலில் பாதங்கள் பதிய மெய் மறந்து நின்றேன்
மலையிலிருந்து கொண்டு வந்த செங்காந்தள் மலர்களைத் தூவிக் கொண்டு
தொலைவில் எழுந்த கதிரவன் சிவந்த மாணிக்கமாய் ஒளி வீசியது

பரந்து விரிந்து பொன்னைப் போல் தகதகத்த ஆழியில்
இளம் சிவப்பாய் நாணத்தின் வரிகள் படர்ந்ததை ரசித்தேன்
கடல் காக்கைகள் மகிழ்ச்சியில் இசைத்து பாடிய பாடல்
காற்றில் கலந்து செவியில் புக இனிதே பொழுது புணர்ந்தது

புணரி, ஆழி  - கடல் 
திரை - அலை 
உண் கண் - மையுண்ட கண் 

என் தமிழ் குடி

இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  
இயற்கை குறித்த தெளிந்த புரிதலும் அறிவும் பெற்று 
நிலத்தை அதன் தன்மை பொறுத்து ஐந்து வகையாகப் பிரித்து 
இயற்கையுடன் இயைந்த வாழ்வு நடத்திய குடி என் தமிழ் குடி!

நில வகை ஐந்திற்கும் அந்த அந்த நிலத்தில் மலர்ந்த மலரால் 
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பெயர் வைத்து 
நில வகைக்கு ஏற்ப உணவு பண்பாடு பொழுது போக்கு அனைத்தும் வகுத்து 
சீரான இனிய வாழ்வு வாழ்ந்த நல்ல குடி என் தமிழ் குடி!

அறமும் வீரமும் வேறு வேறாய் இல்லாமல் 
இனிய இல்லறமும் வீர நாட்டுப் பற்றும் கொண்டு 
இல்லமும் நாடும் காத்து சொல் வன்மையும் அறிவும் செறிவும் 
அழகாக இணைந்த வாழ்வு வாழ்ந்த நல்ல குடி என் தமிழ் குடி!

ஞாலத்தின் பல  நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே 
முதலாய்த் தோன்றி மூத்த நாகரிகங்களில் ஒன்றாய் உயர்ந்ததாய் 
இளமை குன்றாமல் இனிமையும் ஈர்ப்பும் மேலும் மேலும் பெருகி 
தொன்று தொட்டுச் சிறப்பாய் விளங்கும் குடி என் தமிழ் குடி!

சுதந்திர தினம்

இந்த நாள்,
ஆண்டின் திங்கள் வரிசையில் ஓர் திங்கள்
திங்கள் நாட்களின் எண்களில்  ஓர் எண்
 ஞாயிறு திங்கள் வரிசையில் மற்றுமொரு தினம்
இதன் அடையாள முத்திரை ஆகஸ்டுப் பதினைந்து

இந்த நாள்,
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழாம் ஆண்டு
 வரலாற்றில் ஒரு முக்கியத்துவத்தைப் பார்த்தது
பார்த்தது, அதனால் முக்கியத்துவம் தனக்கே பெற்றது
பாரத சுதந்திர தினம் என்ற பெருமையான பட்டம் பெற்றது

இந்த நாள்,
அயலானிடம், என் முன்னோர் காலம் காலமாய் வாழ்ந்த நாடு
செல்வமும் செழிப்பும் பெற்று சிறந்து விளங்கிய நாடு
பல கலை வளர்த்து பெருமை பெற்ற பாரத நல்ல நாடு
எமக்கே அன்றி வேறு ஒருவருக்கும் இல்லை என்று பறைசாற்றியது

இந்த நாள்,
மேலே சொன்ன விளக்கங்களினால் ஆண்டின் மற்றுமொரு தினம் அல்ல
பாட்டும் கூத்தும் வைத்து மகிழ்வதற்கு மட்டும் அல்ல
நாட்டின் நலனுக்கு சிந்திக்கவும் செயலாற்றவும் நினைவு படுத்தும் நாள்
சுதந்திர மேண்மையை உணர்ந்து காக்க சொல்லும் இனிய நாள்!

                                                         *******

சுதந்திரத்தின் அருமையை உணர்வோம், காப்போம், வாழ்வோம், மூதாதையர் இனிது வாழ்ந்த நாட்டை வரும் தலை முறையினருக்கு இனிதாய் கொடுப்போம்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

தாய்

மயில் இறகும் இலவம் பஞ்சும் மென்மை என்று நினைத்திருந்தேன் 
உன் பட்டுக் கன்னம் தொடும் வரை

விண் மீன்களின் கண் சிமிட்டலும்  நிலவின் ஒளியும் பிரகாசம் என்று நினைத்திருந்தேன்
உன் கண் ஒளிர்வதைக் காணும் வரை

வைகறை ஒளியும் மலரும் அரும்பும் அழகு என்று நினைத்திருந்தேன்
உன் புன்னகை பார்க்கும் வரை 

மல்லிகையும் பிச்சியும் நல்ல மணம் என்று நினைத்திருந்தேன் 
உன் தலை உச்சி நுகரும் வரை 

அக்கறை கவனம் அன்பு மிகுந்த பராமரிப்பு நான் பெறுவதற்கே என்று நினைத்திருந்தேன் 
உன்னைக் கருவில் தரிக்கும் வரை

படிப்பும் பட்டமும் பதவியும் பெருமிதம் என்று நினைத்திருந்தேன்
உன்னைக் கரங்களில் ஏந்தும் வரை 

வாழ்வில் ஏது ஏதோ பூரிப்பு என்று நினைத்திருந்தேன்
உன் தாய் என்று ஆகும் வரை! 

படைத்தவன் ஒன்றாகத்தான் படைத்தான்

படைத்தவன் மனிதரை  ஒரே சாயலாகத் தான் படைத்தான் 
பல தேவைகளுக்கு ஏற்ப பல பல தொழில் வைத்தான்
பகலவன் ஒளிவீசும் காலத்தை வைத்து பல நிறம் கொடுத்தான்
பல விதம் வாழ்வின் நன்மைக்கே படைத்தான் 
பகுத்தறிய மற்ற உயிர்களுக்கு மேலாய் ஆறு அறிவும் கொடுத்தான் 
பண்பட்டுப் பயன் அடையாமல் ஆறறிவு மனிதன் பிரிவினை வைத்தான்
படைத்தவன் என்ன செய்வான்? பாவம், ஒன்றாகத்தானே படைத்தான்! 

மேகம்

அழகு வடிவம் ஈர்த்தாலும் 
அணைத்துக்  கொஞ்ச இயலாது!
பஞ்சணை போல் இருந்தாலும் 
படுத்து உறங்க முடியாது!

பலவிதமாய் உருமாறும் தோற்றம் 
ஆனால் அனைத்தும் அழகு!
பிரமாண்டமாய் உருவம் இருந்தாலும்
ஊடுருவிச் செல்லும் மென்மை!

நிலவையும் கண்டு மயங்காமல் 
அனலியையும் கண்டு தயங்காமல் 
சேரும் இடம் நோக்கி 
கடமையாய்ப்   பயணிக்கும் பயணி!

நிலை இல்லாத நாடோடி
ஆனால் வானம் உன் வசம்!
நிலம் குளிர்விக்கும் முன்னோடி
நகர்ந்து செல்லும் மேகம்!

அனலி - சூரியன் 


தேன் மட்டுமா தருகிறது தும்பி?


என் முற்றத்து மலர்த் தொட்டிகளின் அருகில் ரீங்காரமிடும் தும்பிகளே!
என் தோட்டத்துப்  பூக்களில் தேன் அருந்துவீர்கள் சரி
ஆனால் நீர் ஊற்ற வரும் என்னைச் சுற்றுவது ஏன்?
குனிந்த என் முகத்தின் முன் வந்து சிந்தை கவர்வது ஏன்?

நீர் அருந்தவா? நீர் ஊற்றும் எனக்கு நன்றி சொல்லவா?
அப்படி என்றால் அது உங்கள் இனிமையான குணத்தின் சான்றே
இயற்கையாக இறைவன் கொடுத்த நீரை ஊற்றுகிறேன் அவ்வளவே
ஆனால் நீங்கள் செய்வது அனைத்திற்கும் எவ்வாறு நன்றி உரைப்பது?

இனிமையான உணவாய் மருந்தாய் தேன் தருகிறீர்கள்
சுறுசுறுப்பாய் மகரந்த மாற்றம் நீங்கள் செய்யா விட்டால்
மலர் மலர்வது எங்ஙனம்? கனி கனிவது எங்ஙனம்?
இயற்கைச் சூழலின் சம நிலைக்கு இன்றியமையாத்  தும்பிகளே!

கம்பி இல்லாத்  தந்தி பயன்பாட்டின் கதிர் வீச்சுகளால்
மனித வாழ்வுமுறை  மாற்றங்களால் அழிவைச் சந்திக்கும் தும்பிகளே!
உங்களைக் காக்க சிந்தனை செய்து சிறிது செயலாற்றினால் 
நன்றி உள்ளவர் ஆவோம், இயற்கையும் மகிழ்ந்து செழிக்கும்!  

நகரத்தில் அன்றும் இன்றும்

அன்று
சாய சந்தியில் கரு நீல வானில்
பகலவன்  வரைந்து சென்ற இளஞ்சிவப்பு கோடுகள்
வானில் தன் தன் கூடு திரும்பும் பறவைக் கூட்டங்கள்
காற்றில் கலந்து வரும் அவற்றின் இன்னிசைக் கீதங்கள்
இக்காட்சியைக் காண வானம் பார்க்கும் குழந்தைகள்

இன்று
சாய சந்தியில் கரு நீல வானில்
பகலவன்  வரைந்து சென்ற இளஞ்சிவப்பு கோடுகள்
சாலையில் தன் தன் வீடு திரும்பும் ஊர்திகள்
காற்றில் கலந்து வரும் அவற்றின் இரைச்சல்கள்
வானில் எப்பொழுதாவது பறக்கும்  ஒற்றைப் பறவை

இன் உயிர் தமிழ் அன்றோ

வாழும் இடம் சார்ந்து அண்டையருடன் உரையாடும் மொழி  தமிழன்றி வேறாய் இருக்கலாம்
சுற்றுப்புறத்தில் செவி விழும் மொழி பற்பல வகையினதாய் இருக்கலாம்
ஆயினும் இன் உயிர் தமிழினும் இனியது உண்டோ

பணி சார்ந்து எழுதும் மொழி தமிழன்றி வேறாய் இருக்கலாம்
வாசிக்கும் ஏடும் படிக்கும் புத்தகமும் பற்பல மொழியினதாய் இருக்கலாம்
ஆயினும் இன் உயிர் தமிழினும் இனியது உண்டோ

பல மொழி கேட்டாலும் அயல் மொழி பயன்படுத்தினாலும்
தேன் உயிராய் குருதியோடு கலந்தது தமிழன்றோ
வாய் மொழி மாறினாலும் உயிர் மொழி மாறுமோ

இடையில் துவங்கி இடையில் போகும்  மொழி பல உண்டு
ஆனால் தொன்று தொட்டு முதிரா இளமையோடு
செம்மொழியாய் இனிப்பினும் இனிப்பது எம் தமிழ் அன்றோ!

ஆறு பேசுகிறேன்

மலைச்சிகரத்திலிருந்து வாழ்த்தி வழியனுப்பினாள் இயற்கை அன்னை
சலசலத்து துள்ளிப் பாய்ந்தே ஓடுகிறேன் என் மணாளனைக் காண
இருமருங்கிலும் பச்சைப்பசேலென்ற மரங்கள் வாழ்த்துச்சொல்லி நின்றன
மலர்சொரிந்தும் இலை தூவியும் மணமகளான என்னை வாழ்த்திச் சிலிர்த்தன
அவற்றை வாரி எடுத்துக்கொண்டு உவகையுடன் ஓடுகிறேன்
விரைவாக ஓடி களைப்படையாதே என்றுசில பாறைகள் தடுத்தன
அருகிருந்த நிலத்தோழியோ விரைவாக மணாளனைச் சென்று சேரென்று
பாறைக்குப்பின்னே குனிந்து என்னை குதித்தோடச் செய்தாள்
தொலைவில் வரும் என்னைக் காண சிலமரங்கள் தலையை நீட்டிப்பார்த்தன
இன்னும் சிலவோ காலைமட்டும் ஊன்றி முழுதாகச் சாய்ந்து பார்த்தன
என்னையும் ஒளிவீசிய என்னில் தங்கள் பிரதிபலிப்பையும் பார்த்து மகிழ்ந்தன
நாணலும் சிறிய பூஞ்செடிகளும் மெதுவாக என்னைத் தொட்டுப் பார்த்தன
மகிழ்ந்து வாழ்கவென்றே நறுவீ  மணம்பரப்பி தலையாட்டிச் சிரித்தன
அகமலிஉவகையுடன் வெண்தலைப்  பெருங்கடல் மணாளனை அடைகிறேன்
"வருக என் உயிரே", எனப்பெரிதுவந்து அவர் வரவேற்க இரண்டறக்  கலக்கிறேன் 

தேன்மதுரத் தமிழோசை

"தேன் மதுர தமிழோசையை உலகமெல்லாம் பரவச்செய்தல் வேண்டும்" என்றார் எனக்குப்பிடித்த மகாகவி பாரதியார்.  ஆனால் அவர் கனவை எவ்வளவு தூரம் நிறைவு செய்கின்றோம் என்பதே இப்பதிவின் கரு. தமிழ் அல்லாமல் வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத்  தமிழைப் பரப்புதல் இருக்கட்டும், உலகமெல்லாம் வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றோம்? எத்தனை தமிழ் குழந்தைகளுக்கு தாய்மொழியாம் தமிழில் பேச கற்றுக்கொடுக்கிறோம்? இதனைச் செய்யும் பல தமிழரைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. செய்யாதவர் பற்றிதான் என் வருத்தம்.

பல குழந்தைகள் தமிழ் பேச தெரியாது என்பதை பெருமையுடன் சொல்கிறார்கள். பார்க்க வரும் தாத்தா பாட்டியிடம் ஏதாவது வேண்டும் என்றால் சைகையில் கேட்கிறார்கள். இது நான் நேரில் பார்த்த வருத்தப்படவைக்கும் உண்மை. ஒரு சிறுவன் அவன் பாட்டியை கைபிடித்து சமையலறை அழைத்துச்சென்று அடுக்கை காண்பித்தான். கதவைத்திறந்தவுடன் உள்ளே ஏதோ சுட்டிக்காட்ட, பாட்டியும் அவன் கேட்ட தீனியை எடுத்துக்கொடுத்துவிட்டு வந்தார். பேரனுக்குத்  தமிழ் பேச தெரியாதாம்!!

பலர் என் பிள்ளைகள் தமிழ் பேசுவதைப் பாராட்டுகின்றனர். ஆனால் அவர்கள் அல்லவா அவர்கள் குழந்தைகளுக்கும் பயிற்றுவித்திருக்கவேண்டும்? பல ஐரோப்பிய  நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிற ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்னும் பலரும் தங்கள் தாய்மொழியில்தான் பேசுகின்றனர். தாய்மொழி தெரியாதவர்களுடன் உரையாடுவதற்குத் தான் ஆங்கிலம் பேசுகின்றனர். அதுவல்லவோ சரி? அப்படி சில நண்பரைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன். ஏனென்றால் அவர்கள் குழந்தைகள் பெற்றோருடன் பொருட்களை  எண்ணுவதற்கு தங்கள் தாய்மொழியே பயன்படுத்துகின்றனர். ஆனால் என் குழந்தைகளுக்கு நான் ஆங்கிலத்தில் எண்ணுவதற்குத்தான் பழக்கியிருந்தேன்.

தமிழர்களாகிய நாம் தமிழின் மேன்மையை புரிந்துகொள்ளாவிட்டால் பயன்படுத்தாவிட்டால் உலகமெல்லாம் பரவச் செய்தல் எப்படி?
நம் வீட்டில் நமது நண்பர் வட்டத்தில் தமிழ் பேசுபவரே இருக்கும்பொழுது தமிழே பேச உறுதி எடுப்போம். வேறு மொழியினர் இருந்தால் பொது மொழியைப் பேசுவோம். அதுவும் முக்கியமான ஒன்று. வேறு மொழியினரைப் பொருட்படுத்தாமல் தமிழில் பேசினால் அவர்களுக்கு வெறுப்புதான் வருமே தவிர தமிழை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வராது. நான் என் பிரெஞ்சு தோழியிடமும் ரஷ்ய தோழியிடமும் அவர்கள் மொழி பற்றி ஆர்வம் காட்டியதால் அவர்களும் தமிழ் பற்றி கேட்டு அறிந்தார்கள். மூவரும் சேர்ந்து ஒருவர் மொழியை ஒருவர் கற்று கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தமிழ்நாடுபற்றியும் இந்தியாபற்றியும் பல தகவல்கள் சொன்னேன். மிகவும் வியந்தார்கள், ஏனென்றால் அவர்களுக்கு தெரிந்தது ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமையாய் இருந்த இந்தியா மட்டுமே. இப்பொழுது அவர்களுக்கு நமது வரலாறு சிலவும் சங்கத்தமிழ் பற்றி சிலவும் தெரியும். நானும் அவர்கள் மரபு, நாடு பற்றி சில அறிந்துகொண்டேன். தொன்மையான நமது மரபை வியக்கின்றனர்.

நமது தாய்மொழி பற்றி மேலும் மேலும் கற்றுக்கொள்வோம்! பிறமொழிகளையும் அறிந்துகொள்வோம்! தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரப்புவோம்! 

இறைவனே போற்றி !

நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவே
அனைத்தும் உருவாக்கிய அனைத்துமானவனே
நிகழ்ந்தது நிகழ்வது நிகழப்போவது
எல்லாம் அறிந்த இறைவனே
உம்மை வாழ்த்தி வணங்கி போற்றி
இப்பாடல் தருகின்றேன், நீ எனக்கு
இன்னும்பல பாடல் தா
அதில் சில பாடல் உமக்கே தருகின்றேன்!

தமிழ்மீதும் குறிப்பாக சங்கத்தமிழ் மீதும் கொண்ட காதலால் தமிழுக்கென்று ஒரு தனி வலைப்பூ எழுத நினைத்தேன். அதனால் 'தேன்மதுரத்தமிழ்' என்ற இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். சங்கப்புலவர்களின் வழியில் இந்த வலைப்பூவில் முதலாக பதிவு செய்ய கடவுள் வாழ்த்து எழுத வேண்டும் என்ற அவாவில் உருவான கவிதை இது.
வேறு இடங்களில் வைத்திருக்கும் என் தமிழ் பதிவுகளையும் இங்கே இடமாற்றம் செய்ய எண்ணியுள்ளேன்.


தமிழ்க் காதல்!

அசைவளி கொணர்ந்த அதிரல் நறுமணம்
எழிலி கண்டுவிரிந்த மஞ்ஞை தோகை
பெரும்பெயல் பொழிந்து குளிர்ந்த மாடம்
இவற்றினும் மேலாக உள்ளம் உகளத்
தமிழே நீ வேண்டும் என்பதே என் நசை!

இக்கவிதையில் உள்ள சில சொற்களின் அர்த்தங்கள்:
எழிலி - மேகம்
மஞ்ஞை - மயில்
பெரும்பெயல் - பெருமழை
உகள - துள்ள
நசை - விருப்பம் 

இனிமையினும் இனிமை


பலதிங்கள் காணாத என்னுயிர் தோழி வருகிறாள்
அளவளாவ வாசல் செல்லவில்லை நான்!
கன்னல் சாறும் வெல்லப் பாகும் வேண்டுமா என்றாள்
மனையில் நுழைவதற்கு முன்பே, வேண்டாம் என்றேன் !
தித்திக்கும் தேனும் முக்கனியும் வேண்டுமா என்றாள்
மறுத்தே உரைத்தேன் ஒரே சொல்!
ஏதேனும் எடுத்துக்கொள், எல்லாம் மறுத்தால் எப்படி என்றாள் !
"எதுவும் மறுக்கவில்லை, அனைத்தும் வெகுத்தம்  உண்கிறேன்" என்றேன்
அனைத்தும் உண்கிறாயா?, என்றே உள்ளே வந்தனள்
"மெய்யுரைத்தாய்! தொந்திரவு செய்யவில்லை!" என்றே சென்றாள் !
கண்ணே! உன்னை நெஞ்சோடு அணைத்து உச்சிமுகர்ந்து
கண்மூடி அமர்ந்திருந்த என் இன்பநிலை கண்ட என் தோழி!

குழந்தையை அணைத்து பூரித்திருந்த தாய் தோழியைக் காண மான்போல் துள்ளி ஓடவில்லை, இனிப்பாய் எல்லாம் உண்கிறேன் என்கிறாள். அவ்வளவு இனிமையாது தாய்மையின் பூரிப்பு, நிறைவானது குழந்தை தரும் மகிழ்ச்சி!.

புது சொல்:
வெகுத்தம் - நிறைவாய், மிகுதி

மழையின் இன்பம்

கருங்கொண்டல் கண்டு ஓடி ஒளிவதா
கானமயில் போல ஆடிக் களிப்பதா;
வெள்ளித்துளி வீழ்வது கண்டு குடை விரிப்பதா
இலையைப்போல் பூவைப்போல் லயித்து சிலிர்ப்பதா;
இத்தயக்கங்கள் விலக்கி மழைநீர் முகத்தில் ஏந்தி
வதனம் பூவாய் மலர உள்ளம் சிலிர்த்து
மனச்சிறகை விரித்து துள்ளி ஆடுவதல்லவா
இன்பம், மட்டற்ற இன்பம்!

என் தமிழே, கண்ணுறங்கு!

அன்பே ஆருயிரே முத்தே மாணிக்கமே
விலைமதிப்பில்லாக்கற்கள்  பல உண்டு, என் வைரமே!
ஒவ்வொன்றாக சொல்லிக் கொஞ்ச ஆசையுண்டு நேரமில்லை, நடவுக்கு போகவேண்டும்
அதனால் என் தங்கத் தமிழே! நீ கண்ணுறங்கு!

-நடவு செய்யப்போகும் ஒரு தமிழ்த்தாயின் தாலாட்டாக நான் எழுதியது.

'
விலைமதிப்பில்லாக்கற்கள்  ' இந்தச் சொல்லின் இடத்தில் இரத்தினங்கள் என்று முதலில் எழுதினேன், பின்னர் அது வடமொழி என்று அறிந்து இப்படி மாற்றினேன்.

வருக இனிய தமிழ் புத்தாண்டே!

பனிவிடைபெற இளவேனில் தாலாட்ட
பழையன புதுப்பொழிவு பெற
புதியன இனிதாய் மலர
வருக புத்தாண்டே!

வண்ணமலர்கள் அசைந்தாட தும்பி ரீங்காரமிட
குருவிபல இன்னிசை எழுப்ப
மாந்தர்தம் மனம் பூரிக்க
வருக புத்தாண்டே!

வீடும் நாடும் செழிக்க
மகிழ்ச்சியும் சமாதானமும் பெருக
உள்ளங்கள் உவகை கொள்ள
வருக புத்தாண்டே!

தேன்மதுர தமிழ் தித்திக்க
எட்டுத்திக்கும் செந்தமிழ் கமழ
தமிழும் தமிழரும் வளம்பெற
வருக எம் இனிய புத்தாண்டே!

இயல்வது கரவேல்

ஆற்றோரமாய் இருந்த ஒரு ஊரில் வேதன் என்று ஓர் ஏழை தன் மனைவியுடன்  வாழ்ந்துவந்தான். ஆற்றில் மீன் பிடித்து வாழ்ந்து வந்தான். சில நாட்கள் நிறைய மீன்கள் கிடைத்தாலும் பல நாட்கள் ஒன்றும் இல்லாமல் திரும்பி வருவான். ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தான் வேதன். யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வான். ஒரு நாள் வேதனுக்கு இரண்டு மீன்கள் மட்டுமே கிடைத்தன. அவன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் கொடுத்துவிட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு வயதானவர் ஒரு குச்சியை ஊன்றிக்கொண்டுத் தள்ளாடி நடந்து வந்தார். வேதன் ஓடிச்சென்று அவரைத் தாங்கிப்பிடித்து உட்கார வைத்தான். அந்த முதியவர் பல நாள் சாப்பிடாததால் மிகவும் பலவீனமாக இருந்தார். வேதன் உள்ளே ஓடிச்சென்று மனைவியிடம் ஒரு மீனை வாங்கி வந்து அம்முதியவருக்குச் சாப்பிடக் கொடுத்தான். அந்த ஒரு சிறிய மீன் முதியவருக்குப் போதவில்லை. இன்னும் ஏதாவது சாப்பிட இருக்கிறதா என்று கேட்டார். வேதன் உள்ளே ஓடினான். இன்னும் ஒரு மீன்தான் இருந்தது. ஆனால் இருப்பதை மறைத்து முதியவரிடம் ஒன்றும் இல்லை என்று சொல்ல வேதனுக்கு மனமில்லை. அவன் மனதை அறிந்த அவன் மனைவியும் மீதமிருந்த ஒரு மீனையும் அவனிடம் கொடுத்தாள். வேதன் அதை எடுத்துச் சென்று முதியவருக்குச்  சாப்பிடக் கொடுத்தான். அப்பொழுது அவ்விடத்தில் ஒரு ஒளிவெள்ளம் தோன்றியது. முதியவர் இருந்த இடத்தில் ஒரு தேவதை நின்றது. தேவதை வேதனைப் பார்த்து, "உனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இருப்பதை மறைக்காமல், 'இயல்வது கரவேல்' என்பதற்கு இணங்க உதவி செய்த உன்னைப் பாராட்டுகிறேன். இனிமேல் எப்பொழுதும் உனக்குத் தேவையான மீன்கள் கிடைக்கும்." என்று வாழ்த்தி மறைந்தது. அதன் பின்னர் ஒரு நாளும் வேதனுக்கு மீன் கிடைக்காமல் இருந்ததில்லை. அவனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


உங்களால் பிறருக்குச் செய்ய முடிந்த உதவியை மறைக்காமல் செய்யுங்கள்  குழந்தைகளே!

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...